தூத்துக்குடி: ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்த வனத்துறையினர்...! மிளா உயிரிழந்ததால் பரபரப்பு...!

உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினர் கயிறு கட்டி பிடித்தனர்.;

Update:2022-11-28 19:55 IST

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரபட்டினம் தருவைகுளம் பகுதியில் ஏராளமான காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. இவைகள் இரவு நேரங்களில் உடன்குடி பஜார் வீதிகளில் வலம் வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் நேற்று இரவு மாடுகளுடன் சேர்ந்த மான் இனத்தை சேர்ந்த மிளா ஒன்று உடன்குடி மெயின் பஜார் பகுதிக்குள் வந்துள்ளது.

இதை பார்த்த வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருச்செந்தூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு உள்ள வணிக வளாகத்திற்குள் சென்ற மிளாவை, வெளியேவராதப்படி தடுப்பு வைத்து பொதுமக்கள் அடைத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் கயிறு போட்டு மிளாவை பிடிக்க முயன்றனர். அப்போது மிளா பயத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதில் கழுத்தில் கயிறு இறுகியதில் மிளா மயங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மிளாவை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மிளா பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இந்த நிலையில் மிளாவை கயிறு போட்டு பிடித்ததால் தான் இறந்து விட்டது என்று விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

Tags:    

மேலும் செய்திகள்