தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-11 19:10 GMT

மீன்சுருட்டி:

மழைநீர் வடிகால் அமைக்கவில்லை

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வழியாக, விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் 100 அடி மற்றும் 75 அடி இடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதில் 100 அடி இடம் கையக்கப்படுத்தப்பட்ட பகுதியில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து வருகின்றனர். இதேபோல் மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் 100 அடி இடம் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இந்நிலையில் மீன்சுருட்டி பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காடுவெட்டி கிராமத்தில் நான்கு வழிச்சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்காததால் சாலையின் நடுப்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால் சாலை பகுதியே தெரியாததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற வாகனங்களும், கும்பகோணம் பகுதியில் இருந்து சென்னை, கடலூர் மற்றும் விருத்தாசலம் ஆகிய பகுதிகளை நோக்கி சென்ற வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டன.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

இது பற்றி கிராம மக்கள் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்து பார்வையிட்ட போலீசார், இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இந்த சம்பவத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மழையால் அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள சுமார் 10 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரத்தில் தற்காலிக வடிகால் ஏற்படுத்தி, வீடுகளில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டது.

கோரிக்கை

இதேபோல் மீன்சுருட்டி கடைவீதிகளில் சாலையின் இருபுறமும் 75 அடி இடம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் மழை பெய்யும் சமயங்களில் கடைவீதி, பஸ் நிறுத்தம் அருகே மழைநீர் குளம்போல் தேங்குவது வழக்கமாக உள்ளது.

இதன்படி நேற்றும் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. எனவே இப்பகுதியிலும், காடுெவட்டி, நெல்லித்தோப்பு, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு புதிய மேம்பாலத்தின் கீழே சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்