முழுஅடைப்பு போராட்டம் காரணமாக நீலகிரி- கேரளா இடையே போக்குவரத்து நிறுத்தம்

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நீலகிரி- கேரளா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Update: 2022-09-23 18:45 GMT

கூடலூர்

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நீலகிரி- கேரளா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சோதனை

பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து 45 பேரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பஸ்கள் உள்பட எந்த வாகனமும் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து நிறுத்தம்

இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மலப்புரம், வயநாடு உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் பாட்டவயல், எருமாடு உள்பட மாநில எல்லைகள் வரை வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக மைசூரு, பெங்களூருக்கும் பஸ்கள் ஓடவில்லை. இதனால் கேரளா செல்லும் சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் இருந்து மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதேபோல் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் சரக்கு லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்