காருவள்ளியில்ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகைப்பறிப்புமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி மஞ்சுளா (வயது 54). இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மயிலாடுதுறையில் இருந்து மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெங்களூருவுக்கு செல்ல முன்பதிவு செய்தார். இந்த ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை சேலம் மாவட்டம் காருவள்ளி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது கிராசிங்குக்காக அந்த பகுதியில் சிறிது நேரம் நின்றது. அப்போது ரெயிலுக்குள் உள்ள இருக்கையில் மஞ்சுளா தூங்கி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரெயில் புறப்பட்டபோது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் மஞ்சுளாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த மஞ்சுளா கழுத்தில் இருந்த நகையை கையால் இறுக பிடித்து கொண்டார். இதனால் அந்த நகையில் சுமார் 2 பவுன் கொண்ட ஒரு பகுதியை மட்டும் அந்த மர்ம நபர் பறித்து கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா இது பற்றி ரெயிலில் இருந்த பெண் போலீஸ்காரரிடம் தெரிவித்தார். பின்னர் தர்மபுரி ரெயில் நிலையத்தில் இறங்கி ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் புகார் தொடர்பாக நகை பறிப்பு சம்பவம் நடந்த காருவள்ளி பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்தனர். நகைப்பறிப்பு சம்பவம் நடந்த பகுதியின் அருகே உள்ள ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை ரெயில்வே போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.