'நெட்' மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி தகவல்

வரும் கல்வியாண்டு முதல் ‘நெட்’ மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-28 19:51 GMT

சென்னை,

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடுமுழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் 'நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நெட் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் பி.எச்டி ஆராய்ச்சி படிப்பிற்கு நுழைவுத் தேர்வுகளை பல்வேறு நிலைகளாக நடத்தி வருகின்றன. தேசிய கல்விக் கொள்கை-2020 பி.எச்டி மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்பதை ஊக்குவிக்கிறது. இதன்காரணமாக, இதுகுறித்து மதிப்பாய்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், யு.ஜி.சி. நிபுணர்கள் குழுவின் 578-வது கூட்டம் கடந்த மார்ச் 13-ந்தேதி கூடியது. இந்த கூட்டத்தில், வரும் 2024-25-ம் கல்வியாண்டு முதல், பி.எச்டி மாணவர் சேர்க்கைக்கு 'நெட்' மதிப்பெண் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகிற ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்