உத்திரிய மாதா ஆலய திருவிழா

நல்லபிச்சன்பட்டி, கொசவப்பட்டி பகுதிகளில் புனித உத்திரிய மாதா ஆலய திருவிழா நடந்தது.

Update: 2022-07-17 17:42 GMT

செந்துறை அருகே உள்ள நல்லபிச்சன்பட்டி புனித உத்திரிய மாதா ஆலய 25-வது ஆண்டு திருவிழா, ஆலய வெள்ளி விழா மற்றும் மன்ற 25-வது ஆண்டு விழா நடந்தது. கடந்த 14-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவையொட்டி ஆலயத்தில் தினமும் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத்திருப்பலி, திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது. செந்துறை பங்குத்தந்தையர்கள் இன்னாசிமுத்து, பிரிட்டோ, மரிய பிரான்ஸிஸ் பிரிட்டோ ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர்.

பின்னர் புனிதர்களின் 5 தேர்கள் பவனி இரவு நடந்தது. அதன்பின்பு இன்று மதியமும் தேர் பவனி நடைபெற்றது. உத்திரிய மாதா, அந்தோணியார், மிக்கேல் ஆண்டவர், செபஸ்தியார் மற்றும் சந்தியாகப்பர் ஆகிய புனிதர்கள் தேர்களில் பவனி வந்தனர். இன்று கொடியிறக்க திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது. இந்த விழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், முக்கிய பிரமுகர்கள், செந்துறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள் மற்றும் நல்லபிச்சன்பட்டி விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித உத்திரியமாதா திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. தினந்தோறும் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான புனித உத்திரியமாதாவின் சப்பர பவனி நடந்தது. சப்பர பவனி கொசவபட்டி ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து ஆலயத்தை அடைந்தது. இதில் கொசவபட்டி மற்றும் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்