மேளதாளத்துடன் குவிந்த விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் மேளதாளத்துடன் குவிந்தனர். சின்னமனூரில் விவசாயிகள் சிலருக்கு இலவச டிக்கெட் வினியோகம் செய்து அழைத்து வந்தனர்.

Update: 2023-10-20 00:00 GMT

லியோ திரைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் நேற்று தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளாக இந்த படம் திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் காலை 9 மணிக்கு இந்த படம் திரையிடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 19 தியேட்டர்கள் செயல்படுகின்றன. அதில் 16 தியேட்டர்களில் லியோ படம் வெளியானது. இந்த படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ஏராளமான விளம்பர பேனர்களை ரசிகர்கள் வைத்து இருந்தனர். தியேட்டர்களின் முன்பு நேற்று காலையில் ரசிகர்கள் குவிந்தனர். படம் திரையிடும் முன்பு தியேட்டர் வளாகம் முன்பு பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

விவசாயிகளுக்கு இலவச டிக்கெட்

பெரியகுளம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு மேளதாளத்துடன் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆடியபடி வந்தனர். அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பெரும்பாலான தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து ரசிகர்கள் படம் பார்க்க வந்தனர். சில இடங்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த டிக்கெட்களை வாங்கி ரசிகர்கள் படம் பார்த்தனர். சின்னமனூரில் விவசாயிகள் சிலருக்கு இலவச டிக்கெட் கொடுத்து படம் பார்க்க ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்