அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-04-04 20:19 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

சுகாதார வளாகம்

ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாப்பட்டி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக கடந்த 2020-21-ம் நிதியாண்டில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தின் தண்ணீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மினி டேங்க் தொட்டி பொருத்தப்பட்டது.

ஆனால் இந்த சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதன் அருகே அதே நிதியாண்டில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகமும் இன்னும் திறக்கப்படவில்லை.

நடவடிக்கை

எனவே கழிப்பறை இல்லாததால், இப்பகுதியை சேர்ந்த மக்கள் சுகாதார வளாகம் அமைந்துள்ள பகுதியை திறந்த வெளிகழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இப்பகுதியில் போதுமான வாருகால் வசதி இல்லாததால் கழிவு நீர் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் இ்ந்தபகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உபகரணங்களும், தண்ணீர் குழாய்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர். ஆதலால் சுகாதார வளாகங்களை உடனே சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்