சாக்லேட் சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

அனந்தபுரம் அரசு பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

Update: 2022-09-12 16:19 GMT

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அனந்தபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று தனது பிறந்த நாளையொட்டி சக மாணவர்கள் 30 பேருக்கு சாக்லேட் வழங்கியுள்ளார்.

அதை வாங்கி சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு திடீரென வாந்தி -மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அந்த மாணவர்களை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அடுத்தடுத்து மயங்கிய மாணவர்கள்

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இதனிடையே மாணவர் கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்ட மற்ற மாணவர்களுக்கும் அடுத்தடுத்து லேசான மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி, டாக்டர்கள் லட்சுமி, நிவேதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பள்ளிக்கு விரைந்து சென்று அங்கிருந்த மாணவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

கல்வித்துறை அதிகாரிகளால் அதிருப்தி

இதுகுறித்த தகவலின் பேரில் அனந்தபுரம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே மாணவர் சாக்லேட் வாங்கிய கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று அங்கிருந்த சாக்லேட்டை பறிமுதல் செய்து அவை காலாவதியானதா? என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை ஏதும் நடத்தவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நகர பகுதிகளில் உள்ள கடைகளில் மட்டும் அவ்வப்போது ஆய்வு நடத்திவிட்டு செல்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கு காலாவதியான பொருட்கள் வி்ற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்வதில்லை.

காலாவதியான பொருட்கள் விற்பனை

இதனால் கடைகளில் சிலர் காலாவதியான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். எனவே காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கிராமப் புறங்களில் உள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்