ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதில் அ.தி.மு.க.வினர் சளைத்தவர்கள் அல்ல; பவானியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வதில் அ.தி.மு.க.வினர் யாரும் சளைத்தவர்கள் அல்ல என பவானியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2022-08-06 21:31 GMT

பவானி

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வதில் அ.தி.மு.க.வினர் யாரும் சளைத்தவர்கள் அல்ல என பவானியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நேரில் ஆறுதல்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி நகர் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்- அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பவானிக்கு வந்தார். பின்னர் அவர் பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளான தினசரி மார்க்கெட் மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி வீதி பகுதிகளில் தண்ணீரில் இறங்கி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

சளைத்தவர்கள் அல்ல

மேலும் அவர் பவானி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல் காவேரி வீதியில் உள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்களை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்தியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசித்து வந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை அறிந்தவுடன் அந்த பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஓடோடிச்சென்று பொதுமக்களுக்கு உதவிகள் செய்வதில் அ.தி.மு.க.வினர் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இதன்மூலம் அனைவரும் அறிய முடியும்.

மாற்று இடம்

வெள்ளம் புகுந்து 5 நாட்கள் ஆகியும், ஆளும் தி.மு.க. அரசு பாராமுகமாக உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழை கூலித்தொழிலாளர்களே. எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடங்கள் வழங்க அரசு காலதாமதம் செய்யக்கூடாது. தி.மு.க. அரசு மக்களை கண்டு கொள்ளாத அரசாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்