கீழையூர் அருகே தூய சந்தன மாதா ஆலயத்தில் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தூய சந்தன மாதா ஆலயம்
கீழையூர் ஒன்றியம் சோழவித்யாபுரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான தூய சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
தேரை வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது.
திருப்பலி
அதனைத்தொடர்ந்து மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், புனித சந்தன மாதா ஆகிய 5 சொரூபங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தது. முன்னதாக பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. நேற்று கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு மாதாவை வழிபட்டனர்.