ஆப்கானிஸ்தானில் துணை அதிபர் மீது முன்னாள் கவர்னர் பரபரப்பு குற்றச்சாட்டு ‘கடத்தி சென்று நிர்வாணமாக்கி அடித்து உதைத்தார்’

ஆப்கானிஸ்தானின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் அப்துல் ரஷீத் டோஸ்டம். ஆப்கானிஸ்தானின் போர்படைக்கு தலைமை தாங்கிய இவர் உள்நாட்டு போரின் போது பெரும் அட்டூழியங்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் கடந்த 2014–ம் ஆண்டு தேசிய ஐக்கிய அரசில் இணைந்து துணை அ

Update: 2016-12-14 20:07 GMT

காபூல்

ஆப்கானிஸ்தானின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் அப்துல் ரஷீத் டோஸ்டம். ஆப்கானிஸ்தானின் போர்படைக்கு தலைமை தாங்கிய இவர் உள்நாட்டு போரின் போது பெரும் அட்டூழியங்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் கடந்த 2014–ம் ஆண்டு தேசிய ஐக்கிய அரசில் இணைந்து துணை அதிபராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் தற்போது அப்துல் ரஷீத் டோஸ்டம் மீது அவரது சொந்த மாகாணமான ஜவ்ஸ்ஜான் மாகாணத்தின் முன்னாள் கவர்னர் அகமது எஸ்ச்சி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தி உள்ளார்.

அவர் கடந்த மாதம் 24–ந் தேதி டோஸ்டம் தன்னை கடத்தி சென்று நிர்வாணமாக்கி அடித்து, உதைத்ததாக கூறி உள்ளார்.

இது குறித்து அமகது எஸ்ச்சி கூறியதாவது, ‘‘எனது அணிக்கும் டோஸ்டமின் அணிக்கும் இடையே புஸ்காஷி விளையாட்டு (குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் வீரர்கள் ஆட்டின் உடலை குறிப்பிட்ட நேரத்தில் இலக்கில் கொண்டு வைக்கும் விளையாட்டு) நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டோஸ்டம் என்னை தரையில் தள்ளி அவரது காலால் எனது கழுத்தை நெரித்தார். என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்னை அவரது வீட்டுக்கு தூக்கி சென்றார். அங்கு அவர் அவரது வேலையாட்களை அழைத்து எனது ஆடைகளை கலைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் என்னை நிர்வாணமாக்கினர். பின்னர் டோஸ்டம் உள்பட 10 பேர் என்னை சரமாரியாக தாக்கினர்’’ என கூறினார்.

தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ள டோஸ்டம், அகமது எஸ்ச்சியை தான் கடத்தவில்லை என்றும் அவர் உளவுத்துறை அமைப்பால் கைது செய்யப்பட்டார் என்றும் கூறி உள்ளார். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தாகவும், பாதுகாப்பு பிரச்சினைகளில் தலையிட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பாதுகாப்பு படைவீரர்கள் அவரை கைது செய்ததாக டோஸ்டம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் ஆப்கானிஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்