உலகைச் சுற்றி...

பாகிஸ்தானை சேர்ந்த கல்வி ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா, ஐ.நா. அமைதித்தூதர் பொறுப்பை ஏற்றார்.

Update: 2017-04-11 20:30 GMT
* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான்பெர்னார்டினோ நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் வகுப்பறையில் நுழைந்து அங்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியையை அவரது முன்னாள் கணவர் செட்ரிக் ஆன்டர்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவரும் பலியானார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம், அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்தோனேசியாவில் புதிய தேசிய அடையாள அட்டை கொள்முதல் ஊழலில், அந்த நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் சேட்யா நோவண்டோ சிக்கியுள்ளார். அவர் 6 மாத காலம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள ஊழல் தடுப்பு போலீஸ் படை தடை விதித்துள்ளது.

* இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் சிரியா மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் பற்றி எடுத்துரைத்தார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

* பாகிஸ்தானை சேர்ந்த கல்வி ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா, ஐ.நா. அமைதித்தூதர் பொறுப்பை ஏற்றார். இவர் அமைதித்தூதர் பதவியை ஏற்ற மிகக்குறைந்த வயதினர் என்ற பெருமையை அடைந்தார். மலாலாவுக்கு இப்போது வயது 19.

மேலும் செய்திகள்