வங்காளதேசத்தில் பலத்த மழை; நிலச்சரிவு 14 பேர் பலி

வங்காளதேசத்தில் பலத்த மழை, நிலச்சரிவால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-06-12 23:00 GMT

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

இந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அவர்கள் மூங்கிலாலும், பிளாஸ்டிக் பலகைகளாலும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்புகளில்தான் வசித்து வருகின்றனர். அதில் 1,500 தங்குமிடங்கள் பெருத்த சேதம் அடைந்து உள்ளன.

கோக்ஸ் பஜாரில் ஒரு மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ரோஹிங்யா முஸ்லிம் பெண்ணும், அவரது 2½ வயதான ஆண் குழந்தையும் சிக்கிக்கொண்டனர். இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதே போன்று பலத்த காற்று வீசியதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து முகமது அலி என்ற ரோஹிங்யா முஸ்லிம் வாலிபர் பலி ஆனார்.

மழை, நிலச்சரிவுகளில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை ரங்கமாதி அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாகித்த தாலுக்தர் உறுதி செய்தார். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அவர் தெரிவித்தார்.

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் ஒரு லட்சம் பேர் அவதியுற்று வருகிற நிலையில் அவர்களை வேறு இடங்களில் குடி அமர்த்துவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைப்பை சேர்ந்த முகமது ஷா கமால் தெரிவித்தார்.

மழையை எதிர்பார்த்து ஏற்கனவே 28 ஆயிரம் அகதிகள், பாதுகாப்பான இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பு, ரோஹிங்யா அகதிகள் நிலவரம் குறித்து கூறுகையில், ‘‘அகதிகளை இட மாற்றம் செய்வதற்கு காலி மனைகள் இல்லை. இதனால் அவர்களை இடமாற்றம் செய்வது சவால் ஆக உள்ளது. ஆபத்தான நிலையில் இருப்பதாக 2 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். செப்டம்பர் மாதத்துக்குள் அவர்களை பசான்கார் தீவு பகுதிக்குத்தான் மாற்ற வேண்டியது இருக்கிறது’’ என்று கூறியது.

இதற்கு இடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு அங்கு மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.

மேலும் செய்திகள்