பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 48 ஊழியர்கள் நீக்கம்: கூகுள் நிறுவனம் தகவல்

கடந்த 2 ஆண்டுகளில் ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-10-26 04:05 GMT
சான் பிரான்ஸிஸ்கோ, 

பிரபல இணைய தேடு பொறி நிறுவனம் கூகுள்.  அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தில் ஆண்ட்ராய்டு கிரியேட்டராக பணியாற்றிய ஆண்டி ரூபின், அண்மையில் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

மோசமான நடத்தை காரணமாக ஆண்டி ரூபின் வெளியேற்றப்பட்டதாகவும் அவருக்கு வெளியேறும் போது (எக்ஸிட் பேக்கஜ்) 90 மில்லியன் டாலர் தொகை வழங்கப்பட்டதாகவும், பிற பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை கூகுள் மறைத்து விட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. 

இந்த நிலையில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளது. அந்த மின்னஞ்சலில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலியல் தொந்தரவு உள்பட ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 13 பேர் மூத்த மேலாளர்கள் என்றும் அவர்களில் யாருக்கும் எக்ஸிட் பேக்கஜ் அளிக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. 

பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டால் முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்