விமான கழிவறையில் ரகசிய கேமரா - மலேசிய வாலிபர் கைது

விமான கழிவறையில் ரகசிய கேமரா வைத்ததாக மலேசிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-12 22:45 GMT
ஹூஸ்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்டியாகோவில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு ஒரு விமானம் சென்றது. இந்த பயணத்தின் போது, பெண் பயணி ஒருவர் விமான கழிவறையை பயன்படுத்த சென்றார். அப்போது கழிவறையின் உள்ளே ஒரு ஓரத்தில் இருந்த வித்தியாசமான ஒளிரும் கருவி அவரது கண்ணில் தென்பட்டது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் அந்த கருவியை கைப்பற்றி விமான ஊழியர்களிடம் கொடுத்தார்.

விமானம் ஹூஸ்டனில் தரையிறங்கியதும் விமான நிறுவனத்தினர் அந்த கருவியை மத்திய புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கருவியை ஆராய்ந்தபோது, அது வீடியோ பதிவு செய்யும் ரகசிய கேமரா என்பது தெரியவந்தது. மேலும் இந்த ரகசிய கேமரா இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரக விமானத்தின் கழிவறையிலும் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

இதையடுத்து, அந்த விமானத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடந்த மே 5-ந் தேதி அந்த விமானத்தில் பயணம் செய்த, மலேசியாவை சேர்ந்த சூன் பிங் லீ என்ற வாலிபர் கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஹூஸ்டன் நகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த லீயை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்