நியூயார்க் நகரில் இருந்து புளோரிடாவுக்கு நிரந்தர இல்லத்தை மாற்றுகிறார் டிரம்ப்

நியூயார்க் நகரில் இருந்து புளோரிடாவுக்கு நிரந்தர இல்லத்தை டிரம்ப் மாற்ற உள்ளார்.

Update: 2019-11-01 22:41 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிகாரப்பூர்வ இல்லம், வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஆகும்.

ஆனால் 1983-ம் ஆண்டில் இருந்து அவரது நிரந்தர இல்லமாக நியூயார்க் நகரின் டிரம்ப் டவர் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் தனது நிரந்தர இல்லத்தை புளோரிடாவுக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நான் மில்லியன் கணக்கில் வரி செலுத்துகிறேன். ஆனாலும்கூட, நியூயார்க் நகர அரசியல் தலைவர்களும் சரி, மாகாண அரசியல் தலைவர்களும் சரி என்னை மோசமாக நடத்துகின்றனர். இன்னும் சிலர் என்னை மிக மோசமாக நடத்துகின்றனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் கடந்த செப்டம்பர் மாதமே புளோரிடாவில் வசிப்பதற்காக மனு தாக்கல் செய்துள்ளதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு கூறுகிறது.

டிரம்ப் தனது நிரந்தர இல்லத்தை புளோரிடாவுக்கு மாற்றுவதற்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

டிரம்ப், குடியரசு கட்சியை சேர்ந்தவராக இருந்தபோதும், அவர் நிரந்தர இல்லமாக கொண்டிருந்த நியூயார்க்கின் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோவும், நகர மேயர் பில் டி பிளேசியோவும் ஜனநாயக கட்சியினர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. டிரம்புக்கும், இவர்களுக்கும்தான் ஒத்து போகவில்லை.

இப்போது டிரம்ப், நிரந்தர இல்லத்தை புளோரிடாவுக்கு மாற்றுவதை அவர்கள் இருவரும் வரவேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்