அறக்கட்டளை நிதியை தேர்தலில் பயன்படுத்திய ஜனாதிபதி டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் - அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு

அறக்கட்டளை நிதியை தேர்தலில் பயன்படுத்திய ஜனாதிபதி டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-11-08 02:20 GMT
நியூயார்க்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தனது தேர்தல் செலவுகளுக்கு டிரம்ப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இது அரசியல் ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கை என்றும், எதிர்க்கட்சியினரால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். எனினும் இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ அறக்கட்டளை மூடப்பட்டது.

இந்த நிலையில் நியூயார்க் கோர்ட்டில் பெண் நீதிபதி சாலியன் ஸ்கார்புல்லா முன்னிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நிதி மோசடி தொடர்பான டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த வழக்கில் டிரம்புக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.14 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ) அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத 8 தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்