ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேசில் முன்னாள் அதிபர் விடுதலை

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2019-11-09 23:39 GMT
ரியோ டி ஜெனீரோ, 

பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (வயது 74). இவர் மீது ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்த நாட்டின் கோர்ட்டு அவர் குற்றவாளி என தீர்மானித்து 8 ஆண்டுகளும், 10 மாதமும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் காரணமாக அவர் அங்கு கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போய் விட்டது. அதிபர் தேர்தலில் அவர் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகித்த போதும், முதல் சுற்றில் வெற்றிபெற வாய்ப்புள்ள ஒரே வேட்பாளர் என கூறப்பட்டபோதும், தேர்தலில் நிற்க முடியாமல் போனது.

இந்த நிலையில் அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய அந்த நாட்டின் சுப்ரீம் பெடரல் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

பிரேசில் நாட்டைப் பொறுத்தமட்டில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படுகிறபோது, அந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உள்ளூர் கோர்ட்டில் 3 முறையும், சுபீரியர் கோர்ட்டில் 1 முறையும், இறுதியாக சுப்ரீம் பெடரல் கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

இந்த வாய்ப்பு தரப்படாமல் லூயிஸ் சிறையில் அடைக்கப்பட்டதை சுப்ரீம் பெடரல் கோர்ட்டு ஏற்றுக்கொள்ள வில்லை. இப்படி அவரை சிறையில் அடைத்தது அரசியல் சாசன கொள்கைக்கு எதிரானது என அந்த கோர்ட்டு கூறியது.

இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவானது. கியூரிடிபா மத்திய போலீஸ் தலைமையகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை அவரது ஆதரவாளர்கள் பெருந்திரளாக வந்து வரவேற்று அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்