சர்வதேச அளவில் ஒலிக்கும் ஆதரவு குரல்: கேலிக்கு ஆளான சிறுவனுக்கு கவுரவம்

தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறி அழுத சிறுவனை தற்கொலை எண்ணத்தில் இருந்து தேற்றும் வகையில் உலகம் முழுவதுதிலும் இருந்து ஆதரவு குரல் குவிந்து வருகிறது.

Update: 2020-02-23 16:25 GMT
சிட்னி,

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வரும் உடல் வளர்ச்சி குறைபாடுடைய 9 வயது சிறுவன் குவார்டன். தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களால் உருவ கேலிக்கு உள்ளாகி மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொள்ள தூக்கு கயிறு கேட்டு கதறி அழுததை அவனது தாய் யர்ராகா வீடியோவாக இணையத்தில் வெளியிட்டார்.

நெஞ்சை உலுக்கும் இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி பலரின் கண்களை குளமாக்கியது. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகன் எரிக் ட்ரம்ப் தொடங்கி சர்வதேச விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் குவார்டனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ‘ஐ ஸ்டன்ட் வித் குவார்டன்’ என்ற ‘ஹேஸ்டேக்’ டுவிட்டரில் சர்வதேச அளவில் வைரலானது.

இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற, ‘ரக்பி சாம்பியன்ஷிப்’ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் கவுரவம், சிறுவன் குவார்டனுக்கு அளிக்கப்பட்டது.

அதன்படி குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் ‘ஆல் ஸ்டார்ஸ்’ அணிக்கு குவார்டன் தலைமை தாங்கினான். ரசிகர்களின் கரவொலிக்கு மத்தியில், ஒரு கையில் ரக்பி பந்துடன், மறுகையில் அணியில் கேப்டன் ஜோயல் தாம்சனின் விரல்களைப் பற்றி மைதானத்தில் நுழைந்தான் குவார்டன்.

உருவ கேலி காரணமாக மனமுடைந்து போயிருந்த அவனுக்கு இது, பெரும் உற்சாகத்தை அளித்ததாக, அவனது தாய் யர்ராகா தெரிவித்தார்.

இதனிடையே, குவார்டனை போலவே வளர்ச்சி குறைபாடு கொண்ட பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், டுவிட்டர் மூலம் சிறுவனுக்காக நிதி திரட்ட தொடங்கி உள்ளார். தற்போது வரை 3 லட்சம் டாலருக்கும் (சுமார் ரூ.2 கோடியே 10 லட்சம்) அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்