ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழை, வெள்ளம்; ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் பேய் மழை கொட்டி வருகிறது.

Update: 2021-03-22 17:19 GMT

இதனால் அங்குள்ள முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதிலிருந்து வெளியேறும் உபரி நீரால், தலைநகர் சிட்னி உள்பட பல பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சிட்னி நகர மக்களுக்கு, குடிநீர் வழங்கும் வாரகம்பா அணையில், நீர் மட்டம் முழு கொள்ளளவை தாண்டியுள்ளது. கடந்த, 1990-ம் ஆண்டுக்குபின், இந்த அணை முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.இதனால் அந்த அணையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.மேலும் இது தவிர நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 15 தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டு கொள்ளப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கு நியூ சவூத் வேல்ஸ் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.அதன்படி வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே பேய் மழை காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் செய்திகள்