நமீபியாவில் 100 ஆண்டுகளுக்கு முன் நடத்திய இனப்படுகொலைக்கு தற்போது மன்னிப்பு கோரும் ஜெர்மனி

நமீபியாவில் கடந்த 1904-08 ஆம் ஆண்டுகளில் தங்கள் ராணுவம் நடத்திய இனப்படுகொலைக்கு ஜெர்மனி அரசு தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

Update: 2021-05-28 19:38 GMT
பெர்லின்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, முதலாம் உலகப் போருக்கு முன் இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு அடுத்ததாக 3வது மிகப்பெரிய காலணிய அரசாக விளங்கி வந்தது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியா மீது ஜெர்மனி அரசு தனது காலணிய ஆதிக்கத்தை செலுத்தி வந்தது.

நமீபியாவில் வாழ்ந்த பழங்குடி இன மக்கள் ஜெர்மன் அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி வந்தனர். குறிப்பாக ஹெரேரோ மற்றும் நாமா ஆகிய 2 பழங்குடி இனங்களும், ஜெர்மனி அரசாங்கத்தின் நில அபகரிப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். 

இந்த போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர ஜெர்மனி அரசு தனது ராணுவத்தை பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கியது. இதனால் 1904-1908 வரை 4 ஆண்டுகளில் சுமார் 65,000 ஹெரேரோ இன மக்களும், 10,000 நாமா இன மக்களும் ஜெர்மன் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை 20 ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவங்கள் நடந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், தார்மீக அடிப்படையில் இந்த இனப்படுகொலைக்கு மன்னிப்பு கோரிவதாக தற்போதைய ஜெர்மனி அரசு கூறியுள்ளது. மேலும் நமீபியாவில் தற்போது வாழ்ந்து வரும் ஹெரேரோ மற்றும் நாமா இன மக்களின் முன்னேற்றத்திற்காக 1.1 பில்லியன் யூரோ மதிப்பிலான நலத்திட்டங்களுக்கான உதவிகளை செய்ய இருப்பதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்