சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம்; 5 ஆண்டுகள் நிறைவு

மாற்று எரிசக்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த எரிபொருள் இல்லாமல் சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம் தனது பயணத்தை நிறைவு செய்து 5 ஆண்டுகள் முடிந்து உள்ளது. இந்த விமானத்தை இயக்கிய விமானி அவரின் பயணத்தை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Update: 2021-07-27 01:26 GMT
உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம்
அமீரகம் மற்றும் ஏனைய உலக நாடுகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சூரிய மின்சக்தி விமானம் ‘சோலார் இம்பல்ஸ் 2’ ஆகும். இந்த விமானம் உலக நாடுகளிடையே மாற்று எரிசக்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.இது கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி அபுதாபியில் இருந்து தனது உலக பயணத்தை தொடங்கியது. இந்த விமானம் வானில் சராசரியாக 80 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 140 கி.மீ. வேகத்திலும் செல்லக்கூடியது.

இறுதி பயணம்
மேலும் இந்த விமானத்தால் அதிகபட்சமாக சராசரியாக 8 ஆயிரம் அடி முதல் 39 ஆயிரம் அடி உயரம் வரை வானில் பறக்கக்கூடியது. இந்த விமானத்தில் மின்சக்தியால் இயங்கும் மோட்டார்களைத் தவிர வேறு எந்த மாற்று எரிசக்தியாலும் இயக்க முடியாது.இதற்காக இதன் பிரமாண்ட இறக்கைகளில் 17 ஆயிரம் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து பெறப்படும் மின்சாரத்தால் இந்த விமானத்தை ஒருவர் மட்டுமே இயக்க முடியும். இதை ஆண்ட்ரே போர்ச்பெர்க் (வயது 63) மற்றும் பெட்ராண்ட் பிக்கார்டு (68) ஆகிய 2 விமானிகள் ஒருவர் மாற்றி ஒருவர் இயக்கினார்கள். இந்த விமானத்தின் இறுதி பயணத்தை விமானி பெட்ராண்ட் பிக்கார்டு இயக்கினார்.

அபுதாபியில் தரையிறங்கியது
இந்த விமானம் உலகை சுற்றி கடைசியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி எகிப்து நாட்டில் அபுதாபி வருவதற்காக தரை இறங்கியது. ஆனால் விமானி பிக்கார்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாலும், சவுதி அரேபியாவில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை மாறுபாடு காரணமாகவும் உடனே அங்கிருந்து புறப்பட முடியாமல் இந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.அதன் பிறகு அனைத்து தடங்கல்களையும் கடந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி அமீரக நேரப்படி அதிகாலை 3.28 மணிக்கு கெய்ரோ விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டது. இந்த பயணத்தில் 48 மணி நேரம் தொடர்ந்து எந்த எரிபொருளின் உதவி இல்லாமல் வானில் 3 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து வெற்றிகரமாக அபுதாபி அல் பத்தீன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. தற்போது வெற்றிகரமாக 5 ஆண்டுகள் தனது பயணத்தை நிறைவு செய்து உள்ளது.

இது குறித்து அந்த விமானத்தை இயக்கிய விமானி பிக்கார்டு தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-

திறன்மிக்க தொழில்நுட்பங்கள்
5 ஆண்டுகளுக்கு முன் நானும், எனது நண்பர் போர்ச்பெர்க் இருவரும் இந்த விமானத்தை இயக்கினோம். இது உலகளாவிய விமானமாக தொழில்நுட்பத்தின் உச்சத்தை காட்டுவதாக உள்ளது.தூய்மையான மற்றும் திறன்மிக்க தொழில்நுட்பங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. புகையில்லாமல், சத்தமில்லாமல் பறப்பது எவ்வளவு பெரிய நிகழ்வு என்பதை இப்போது நினைவூட்டுவதாக உள்ளது.

இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்