ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஊரடங்கை கண்காணிக்க ராணுவம் குவிப்பு

ஆஸ்திரேலியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-31 01:20 GMT
ஆஸ்திரேலியாவில் டெல்டா கொரோனா வைரஸ்
சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்திலேயே தீவிர நடவடிக்கைகள் மூலம் அதனை கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது.முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.அங்கு கடந்த மாதத்தின் பிற்பகுதியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு
இதனைத்தொடர்ந்து அந்த 3 மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் மெல்ல மெல்ல வைரஸ் பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.ஆனால் சிட்னி நகரில் அதற்கு நேர்மாறாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தது. அங்கு ஒவ்வொரு நாளும் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த புதன்கிழமை இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 177 
பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து ஏற்கனவே 5 வாரங்களாக அமலில் இருக்கும் ஊரடங்கை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து மாகாண அரசு உத்தரவிட்டது. அதன்படி சிட்னி நகரில் ஆகஸ்டு 28-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை கண்காணிக்க ராணுவம் குவிப்பு
இதற்கிடையில் அரசின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு சிட்னி நகர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதே வேளையில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இந்த நிலையில் மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய சிட்னி 
நகரில் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘சிட்னி நகரில் கொரோனா ஊரடங்கை கண்காணிக்க நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் அனைவரும் நாளை (ஞாயிறு) வரை பயிற்சியில் இருப்பார்கள். அதன் பின்னர் திங்கட்கிழமை முதல் அவர்கள் சிட்னி நகர் முழுவதும் ஆயுதம் இல்லாத ரோந்து‌ பணியை தொடங்குவார்கள்’’ என கூறினார்.

ராணுவத்தின் தலையீடு அவசியமா?
அதே சமயம் கொரோனா ஊரடங்கை அமல் படுத்துவதில் ராணுவத்தின் தலையீடு அவசியமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே அங்கு மக்கள் போலீசாரால் இலக்கு வைக்கப்படும் நிலையில் தற்போது ராணுவத்தை குவித்துள்ளது மக்களுக்கு கூடுதல் பிரச்சினையாக அமையும் மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்