பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக ரூ.90 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு டிரம்ப் வழக்கு
2 வெவ்வேறு பகுதிகளை இணைத்து கலவரத்தை தூண்டும் விதமாக டிரம்ப் பேசியதுபோல சித்தரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.;
கோப்புப்படம்
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை ஏற்காத டிரம்ப் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது ஆதரவாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி தலைநகர் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அப்போது பாதுகாப்பு தடையை மீறி நுழைந்த போராட்டக்காரர்கள் கேபிடல் அலுவலகத்தை சேதப்படுத்தினர். இந்த கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டது. அதில் அவரது உரையின் 2 வெவ்வேறு பகுதிகளை இணைத்து கலவரத்தை தூண்டும் விதமாக டிரம்ப் பேசியதுபோல சித்தரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இயக்குனர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் உள்ளிட்டோர் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து அந்த நிறுவனமும் டிரம்பிடம் மன்னிப்பு கோரியது. எனினும் இந்த ஆவணப்படம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி சுமார் ரூ.90 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு டிரம்ப் பி.பி.சி. நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஆண்டே முடிந்ததால் தற்போது இந்த வழக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாண கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பி.பி.சி. செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் முன்பு தெளிவுபடுத்தியது போல், இந்த வழக்கை நாங்கள் எதிர்கொள்வோம். நடந்துகொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள் குறித்து நாங்கள் மேலும் கருத்து தெரிவிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார்.