ரஷியா: பள்ளியில் சக மாணவன் கத்தியால் குத்தியதில் 10 வயது மாணவன் பலி; செல்பி எடுத்த கொடூரம்

ரஷியாவின் தெற்கே செல்யாபின்ஸ்க் நகரில் கடந்த ஆண்டு, சுத்தியலால் மாணவன் ஒருவன் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர்.;

Update:2025-12-17 05:50 IST

மாஸ்கோ,

ரஷியாவின் மாஸ்கோ நகரில் ஒடின்ட்சோவோ மாவட்டத்தில் கோர்கி-2 என்ற கிராமத்தில் படித்து வரும் மாணவன் திமோதி (வயது 15). சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியர் இந்த சிறுவனை கண்டித்துள்ளார். இதில் அந்த மாணவன் ஆத்திரத்தில் இருந்துள்ளான்.

இந்நிலையில், திமோதி நேற்று பள்ளிக்கு வந்தபோது பையில் கத்தியை மறைத்து எடுத்து சென்றுள்ளான். ஆசிரியை ஒருவரிடம் எந்த நாட்டை சேர்ந்தவர் நீங்கள்? என கேட்டிருக்கிறான். அப்போது, டிமிட்ரி பாவ்லவ் (வயது 32) என்ற பள்ளி பாதுகாவலர் சம்பவ பகுதிக்கு வந்துள்ளார். அவரை பார்த்ததும், பையில் இருந்த மிளகு ஸ்பிரேவை எடுத்து திடீரென டிமிட்ரியின் முகத்தில் அடித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்து சரிந்து கீழே விழுந்த அவரை கத்தியால் தாக்கியுள்ளான். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதவிர, அந்த கட்டிடத்தில் இருந்த வேறு சில மாணவர்களையும் கத்தியால் குத்தியுள்ளான்.

இந்த சம்பவத்தில் 10 வயது மாணவன் பலியாகி உள்ளான். அந்த சிறுவனின் உடலின் முன்னால் திமோதி செல்பி எடுத்து கொண்ட கொடூரமும் நடந்துள்ளது. இதுபற்றிய வீடியோவும் வைரலானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் சென்று தஞ்சமடைந்தனர். திமோதி அணிந்திருந்த டி-சர்ட்டில் உயிர்கள் முக்கியம் இல்லை என எழுதப்பட்டு இருந்தது. முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளான்.

ரஷியாவில் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிது. எனினும், சமீப ஆண்டுகளாக பள்ளியில் தாக்குதல் நடத்துவது அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு, ரஷியாவின் தெற்கே செல்யாபின்ஸ்க் நகரில் சுத்தியலால் மாணவன் ஒருவன் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்