மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்: 10 பேர் பலி

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-08-17 22:12 GMT

கோலாலம்பூர்,

மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் இரு விமானிகள் உள்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தார்.

கரும்புகை வெளியேறியது

நெடுஞ்சாலையில் இறங்கியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது விமானம் மோதியது. இதில் விமானம் சுக்குநூறாக நொறுங்கி விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு விமானம் தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது.

சமூக வலைதளங்களில் வைரல்

எனவே தீயை அணைப்பதற்காக அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பின்னர் நடைபெற்ற மீட்புப்பணியில் விமானத்தில் பயணித்த 8 பேர் உள்பட 10பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் விமானம் மோதுவது போன்ற காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்