சூடான்: இரு தரப்பினர் இடையே மோதல் - பலி எண்ணிக்கை 125 ஆக உயர்வு

சூடானில் ஆப்பிரிக்க பழங்குடியினருக்கும் அரபியர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-14 14:33 GMT

கார்டூம்,

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2003-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வந்தது. இந்த போரால் ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக, அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டார்ஃபுர் மாகாணத்தில் இருந்து லட்சக்கணக்கான ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை அரேபியர்கள் கைப்பற்றி விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நிலத்தின் சொந்த உரிமையாளர்களுக்கும், போரால் கைவிடப்பட்ட நிலத்தை கைப்பற்றியவருக்கும் இடையே உரிமைச்சண்டை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த சண்டையின் போது இரு தரப்பு மோதல்கள் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகிறது. இந்த மோதலால் இரு தரப்பிலும் பல்வேறு கிளர்ச்சிப்படைகளும் உருவெடுத்துள்ளன.

இந்நிலையில், டார்ஃபுர் மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள குல்பஸ் நகரில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆப்பிரிக்க பழங்குடியின மக்களின் வீடுகளை அரேபிய கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இதனை தொடந்து இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் நேற்று வரை 100 பேர் உயிரிழந்தனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்த வன்முறையால் இதுவரை இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மோதலில் 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்