ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு: 42 பேர் பலி; 11 பேர் மாயம்

ஹைதி நாட்டில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 42 பேர் பலியாகி உள்ளனர். 11 பேரை காணவில்லை.

Update: 2023-06-06 06:49 GMT

போர்ட்-ஆவ்-பிரின்ஸ்,

ஹைதி நாட்டில் கும்பல், கும்பலாக வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல், அரசியல் தோல்வி மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், திடீரென ஏற்பட்டு உள்ள தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சிக்கி 42 பேர் வரை பலியாகி உள்ளனர். 11 பேரை காணவில்லை. இதுபற்றி ஐ.நா. அமைப்பு வெளியிட்ட செய்தியில், கடுமையான கனமழையால் 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

13,400 பேர் தங்களது இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். பலருக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அவசர தேவையாக உள்ளது என தெரிவித்து உள்ளது.

ஹைதி நாட்டு அதிகாரிகள் கூறும்போது, தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸ் பகுதியில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்த லியோகனே நகரம் வெள்ளத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், 20 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தேசிய அவசரகால இயக்க மைய அதிகாரிகளை உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் ஏரியல் ஹென்றி உத்தரவிட்டு உள்ளார்.

அந்நாட்டில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே அவசர உதவி தேவைப்படுகிற, மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வரும் சூழலில், இதுபோன்ற கொடூர வானிலை பாதிப்புகளாலும் மக்கள் பெருமளவில் அவதியுற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்