தீவிரமடையும் போராட்டம்: பாக். பிரதமரின் வீட்டை சேதப்படுத்திய இம்ரான் கான் ஆதரவாளர்கள்

இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2023-05-11 01:42 GMT

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இம்ரான்கான் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் இல்லத்தின் மீது, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

போலீசாரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் பிரதமரின் மாடல் டவுன் லாகூர் இல்லத்தை அடைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் முன் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும், பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களிலும் நேற்று இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளனர்.   

Tags:    

மேலும் செய்திகள்