ஒரே நாளில் 6 முறை இதயதுடிப்பு நின்றுபோன இந்திய மாணவரை காப்பாற்றிய இங்கிலாந்து டாக்டர்கள்

ஒரே நாளில் 6 முறை இதயதுடிப்பு நின்றுபோன இந்திய மாணவரை இங்கிலாந்து டாக்டர்கள் காப்பாற்றினர்.;

Update:2023-10-06 03:06 IST

image courtesy: ImperialNHS twitter

லண்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அதுல் ராவ். இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவத்துக்கு முந்தைய பட்டப்படிப்பு படித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி கல்லூரியில் இருந்தபோது அதுல் ராவ் திடீரென நிலைகுலைந்து விழுந்தார்.

இதனையடுத்து, சக மாணவர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்ததில் அவருக்கு நுரையீரலில் ரத்தம் உறைந்து, அதனால் இதய துடிப்பு நின்றுபோனது தெரியவந்தது. இதையடுத்து, ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளை கொடுத்து, அதுல் ராவை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக முயன்றனர்.

சிகிச்சையின்போதே மேலும் 5 முறை அதுல் ராவின் இதய துடிப்பு நின்றுபோனது. இதனால் நிலைமை இன்னும் மோசமானது. எனினும் டாக்டர்கள் விடியவிடிய அயராது உழைத்து, அதுல் ராவின் உயிரை காப்பாற்றினர். ஒரே நாளில் 6 முறை இதய துடிப்பு நின்றுபோன போதும் டாக்டர்களின் அயராத முயற்சியால் அதுல் ராவ் உயிர் பிழைத்தது அவரது பெற்றோர் மற்றும் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் அதுல் ராவ் சமீபத்தில் லண்டன் ஆஸ்பத்திரிக்கு தனது பெற்றோருடன் சென்று, தனது உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது லண்டனிலேயே தனது மருத்துவ படிப்பை தொடரப்போவதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்