இஸ்ரேல் நகரில் ஏவுகணை தாக்குதல்; அபாய ஒலி எழுந்ததும் புகலிடங்களை தேடி மக்கள் ஓட்டம்

இஸ்ரேலின் கடலோர நகர் மீது ஏவுகணை தாக்குதல் எதிரொலியாக அபாய ஒலி எழுந்ததும், புகலிடங்களை தேடி மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

Update: 2023-10-10 21:26 GMT

ஆஷ்கெலான்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதி மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்தது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 50 கி.மீ. தெற்கே மற்றும் காசா முனை பகுதியை ஒட்டிய எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்த கடலோர நகரான ஆஷ்கெலான் நகரில் தொடர்ச்சியாக ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

காசா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும், அதற்கு பதிலடியாக ஆஷ்கெலான் பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதன்படி, ஏவுகணை தாக்குதல் நடந்ததும், ஆஷ்கெலான் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் அபாய ஒலி எழுப்பப்பட்டது.

இதனால், மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக வெடிகுண்டு புகலிடங்களை நோக்கி ஓடினர். இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பேரும், பாலஸ்தீனிய மக்கள் 770 பேரும் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்