எனது கடைசி டுவிட்... போலீசார் என்னை கைது செய்வதற்காக சுற்றி வளைத்து விட்டனர்: இம்ரான் கான்

போலீசார் என்னை கைது செய்வதற்கு முன்னான எனது கடைசி டுவிட் இது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-05-17 15:36 GMT

கராச்சி,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (வயது 70), கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்து சென்றனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஊழல் செய்து, பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிற அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கில், ஊழல் தடுப்பு கோர்ட்டு எண்.1-ல் நீதிபதி முகமது பஷீர் முன்னிலையில் இம்ரான்கான் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி பஷீர், இம்ரான்கானை 8 நாட்கள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து அவரதுவழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இருந்தனர். இதன் மீது நடந்த விசாரணையில், இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இம்ரான் கான் இன்று வெளியிட்ட லைவ் வீடியோ செய்தி ஒன்றில், எனது அடுத்த கைது நடவடிக்கைக்கு முன் நான் வெளியிடும் கடைசி டுவிட் பதிவாக இது இருக்க கூடும். எனது வீட்டை போலீசார் சுற்றி வளைத்து விட்டனர் என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி டான் பத்திரிகையின் வலைதள செய்தி சேகரிப்பாளர் ஒருவர் கூறும்போது, ஜாமன் பூங்காவில் உள்ள பி.டி.ஐ. கட்சியின் தலைவரான இம்ரான் கானின் இல்லத்திற்கு வெளியே பஞ்சாப் போலீசார் வந்து உள்ளனர் என உறுதிப்படுத்தி உள்ளார்.

போலீஸ் அதிகாரிகளால் அவரது இல்லம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். வீடியோ செய்தி ஒன்றில் இம்ரான் கான் பேசும்போது, பாகிஸ்தான் அழிவுக்கான பாதையை நோக்கி போகிறது என நான் பயந்து போய் இருக்கிறேன்.

நாம் சிந்திக்கவில்லை என்றால், பின்னர், நமது நாட்டின் துண்டாக உள்ள அனைத்து விசயங்களையும் சேகரிக்க முடியாமலேயே போகும் நிலையை நாம் அடைந்து விட கூடும் என்று அச்சப்படுகிறேன் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்