ஜெர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்; 32 வயது ஈரானிய நபர் கைது

ஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் என்ற சந்தேகத்தின் பேரில் 32 வயது ஈரானிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-01-09 09:00 GMT



பெர்லின்,


ஜெர்மனியில் டார்ட்மண்ட் பகுதியருகே கேஸ்டிராப்-ராக்சல் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அந்த நபர் சையனைடு மற்றும் ரிசின் உள்ளிட்ட நச்சு பொருட்களை விலைக்கு வாங்கினார் என தெரிய வந்தது. ஈரானிய நாட்டை சேர்ந்த 32 வயது நபரான அவரை பின்பு போலீசார் கைது செய்து காவலில் கொண்டு வந்தனர்.

அவரது வீட்டை தங்களது வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட தொடங்கினர். ஈரானிய நபரின் வீட்டில், பாதுகாப்பு கவசங்கள் அணிந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் அவசரகால பணியாளர்கள் சூழ்ந்து காணப்படுகின்றனர்.

இதுபற்றி டஸ்செல்டார்ப் போலீஸ், ரெக்லிங்ஹாசென் போலீஸ் மற்றும் முன்ஸ்டர் போலீசார் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில், நீதிபதி ஒருவரின் உத்தரவின் பேரில் சோதனை நடத்தி உள்ளோம்.

குற்றவாளி தீவிர வன்முறை செயலுக்கு தயாராகி வந்துள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. சையனைடு, ரிசின் போன்ற பொருட்களை வாங்கி இருப்பது இஸ்லாமிய தூண்டுதலின் பேரிலான தாக்குதலை நாட்டில் நடத்த கூடிய ஆபத்து காணப்படுகிறது.

இதுபற்றி குற்றவாளியுடன் மற்றொரு நபரையும் காவலுக்கு எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்து உள்ளது. சான்றுகள் கைப்பற்றப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. கைது வாரண்டுக்கான நீதிபதியின் உத்தரவை பெற்ற பின்பு முடிவு செய்யப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என அவர்களது அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்