வெற்றியை வழங்கும் அனுமன் வழிபாடு

ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

Update: 2016-12-27 10:24 GMT
ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது. வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.

திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினான். குழந்தைச் செல்வம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம்புரிந்தான். அவன் முன் தோன்றிய ஈசன், ‘உனக்கொரு மகள் பிறப்பாள். அவளுக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் வலிமையும், வீரமும் பெற்று மரணம் இல்லாதவனாக வாழ்வான்’ என்று கூறி மறைந்தார்.

அவ்வாறே குஞ்சரனுக்கு ஒரு மகள் பிறக்க, அஞ்சனை என்று பெயரிட்டு வளர்த்தனர். அவள் பருவம் எய்ததும், கேசரி என்னும் வானர வீரனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தார் குஞ்சரன்.

ஒருநாள் அஞ்சனையின் முன்பு தர்மதேவதை தோன்றி, ‘பெண்ணே நீ வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று மகாதேவனை குறித்து தவம் செய். அவரருளால் விண்ணவர் போற்றும் மகன் பிறப்பான்’ என்றது.

தேவதை கூறிய இடத்திற்குச் சென்ற அஞ்சனை, காற்றை மட்டும் உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தாள். அவளது தவத்தைக் கண்டு வாயு   தேவன் அதிசயித்தார். ஒரு முறை வாயு பகவான் சிவசக்தி வடிவான கனி ஒன்று, அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

அந்தக் கனியை உண்ட சில தினங்களில் அவள் கருவுற்றாள். அப்போது ஒரு அசரீரி எழுந்தது. ‘அஞ்சனா தேவி! சிவனுக்கும், சக்திக்கும் ஏற்பட்ட சிவசக்தி வடிவமான அம்சத்தை சிவனின் ஆணைப்படி, வாயுதேவன் கனி உருவில் உன்னை உண்ணச் செய்தான். உனக்கு சிவசக்தி அம்சம் கொண்ட மகன் பிறப்பான். அவன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படுவான். விண்ணும் மண்ணும் அவனைப் போற்றி புகழும்’ என்றது.

அரண்மனைக்குத் திரும்பிய அஞ்சனை, நடந்தது பற்றி தனது கணவர் கேசரியிடம் கூறினாள். மாதங்கள் பல கடந்தன.

ஒரு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்கப்பட்டார்.

வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தார். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். சொல்லின் செல்வனான அனுமன் முதன் முதலாக ராமனைச் சந்தித்தபோது, ‘நீங்கள் யார்?’ என்று ராமன் கேட்டார்.

அதற்கு, ‘காற்றின் வேந்தருக்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். நான் அனுமன் என்று, தன் தந்தையின் பெயர், தாயாரின் பெயர், தன் பெயர் அனைத்தையும் அடக்கமாக கூறினார் அனுமன்.

ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். அனு மனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார்.

விரதம் இருப்பது எப்படி?


அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். இன்பம் பெருகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபட வேண்டும்.

வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள்                  அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்வதனால் அனுமன் மிக மகிழ்வார்.

அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி  அடையும்.

காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

மேலும் செய்திகள்