நோய் தீர்க்கும் தன்வந்திரி

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது.

Update: 2017-01-17 02:00 GMT
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதிக்கு செல்லும் வழியில் தன்வந்திரி பகவான் சன்னிதி உள்ளது. இத்தலத்தில் அருள் பாலிக்கும் அரங்கனுக்கே வைத்தியம் செய்யும் விதமாக, ஸ்ரீமன் நாராயணனே இங்கு தன்வந்திரியாக திகழ்வதாக கூறப்படுகிறது. கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம் இவற்றுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். பொதுவாக எல்லாச் சன்னிதிகளின் உச்சியிலும், விமானம் அமைப்பது மரபு. ஆனால் தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதால், நோயாளிகள் பலரும் அவரிடம் வைத்தியம் பார்க்க வருவார்கள் என்பதால் ஆகம விதிகளின்படி இவரது சன்னிதிக்கு மேல் விமானம் கட்டப்படவில்லை.

முதன்மை தலம்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவில். 108 வைணவத் தலங்களில் முதன்மையான தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இந்த ஆலயத்தை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பெரியகோவில் என்றும் அழைக் கிறார்கள். வைணவத்தைப் போற்றி வளர்த்த 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட ஒரே தலம் இது மட்டுமே என்பது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. ஸ்ரீரங்கம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர். உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே, இத் தலத்துக்கு நேரில் வந்து இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சுக்ர பகவான்  தலம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ர பரிகார தலமாக கருதப்படு கிறது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் மூலவர் ‘ரங்கநாதர்’ மற்றும் ‘பெரிய பெருமாள்’ என்ற திரு நாமங்களைக் கொண்டு அழைக்கப்படுகிறார். உற்சவமூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும், ‘அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார். வலக்கை திருமுடியைத் தாங்க, இடக்கை மலர்ப் பாதத்தை சுட்டிக் காட்ட தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள்பாலிக்கிறார் மூலவர் ரங்கநாதர்.

7 லோகங்கள்

ரங்கநாதரைச் சுற்றி 7 பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்த ஏழு பிரகாரங்களும், ஏழு லோகங் களாக கருதப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆலயம் என்று இருந்தால், அதைச் சுற்றி ரத வீதிகள் என ஒரு நகரம் அமைந்திருக்கும். ஆனால் வீதிகளே பிரகாரங்களாக கொண்ட நகரை தனக்குள் கொண்டிருப்பது ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆலயம். இவற்றில் 7–வது பிரகாரம் ‘மாட மாளிகை பிரதட்சணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரகாரத்தின் தெற்கு வாசலாக இருந்த மொட்டை கோபுரம், அகோபில மடம் 44–வது பட்டம் அழகிய சிங்கர் ஜீயரால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் உயரம் 236 அடியாகும்.

ரங்க விமானம்

திருவரங்கத்தில் இருக்கும் ‘ரங்க விமானம்’ ஆதியில் தானாகவே உருவானதாக கூறப்படுகிறது. இதைச் சுற்றி 24 கிலோமீட்டர் தூரத்துக்குள் எங்கே இருந்தாலும் முக்தி நிச்சயம் என்கிறார்கள். இந்த விமானம் பொன்னால் வேயப்பட்டு ‘ஓம்’ என்கிற பிரணவ வடிவில் அமைந்துள்ளது. பிரம்ம தேவன், பல ஆயிரம் ஆண்டுகள் மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததன் பலனாக, பாற்கடலில் இருந்து பெறப்பட்டது ரங்க விமானம். நான்கு வேதங்களையும் பிரம்மா இந்த விமானத்தின் முன் ஓதியிருக்கிறார். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்த ரங்க நாதரை, இசவாகு மன்னர் தன் குல தெய்வமாக அயோத்தியில் வைத்து பூஜை செய்து வந்தார். இசவாகு வம்ச குலத் தோன்றலான ராமபிரான், சீதையை மீட்க உதவிய விபீ‌ஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தை பரிசாக அளித்தார். விபீ‌ஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், அந்த மூர்த்தத்தை காவிரி நதியின் கரையில், தன் அரசான இலங்கையை நோக்கி அருள் தரும் முகமாக  பிரதிஷ்டை செய்தான்.

சங்கடம் தருமா சந்திராஷ்டமம்!

ஒரு ராசிக்கு இடமிருந்து வலமாக எட்டாவது ராசியில் சந்திரன் வரும்பொழுது, அது சந்திராஷ்டமமாகக் கருதப்படுகிறது. அஷ்டமத்துச் சனியை விட, அஷ்டமத்து குருவை விட, அதிகத் தாக்கம் தரக்கூடிய நாட்கள் இவை. இதுபோன்ற நாட்களில் எதிர்பார்ப்புகள் நடைபெறாது. குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். நிம்மதி குறையும். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். விரயங்கள் கூடும். பயணங்கள் மாறும். பொறுப்பு சொல்வதால் சிக்கல்கள் உருவாகலாம். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். எனவே சந்திராஷ்டம நாட்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். உரிய வழிபாடுகளை வைத்துக்கொண்டால் ஓரளவாவது நற்பலன் கிடைக்கும்.

எட்டு தீர்த்தங்கள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் முக்கிய தீர்த்தமாக விளங்குவது  சந்திர புஷ்கரணி தீர்த்தம். இந்த தீர்த்தத்தைச் சுற்றி, அதன் அங்கமாக தெற்கே அசுவ தீர்த்தம், தென் கிழக்கில் ஐம்பு தீர்த்தம், கிழக்கே பில்வ தீர்த்தம், வடமேற்கே வகுள தீர்த்தம், வடக்கே கதம்ப தீர்த்தம், வடகிழக்கில் ஆம்பர தீர்த்தம், மேற்கே புன்னாக தீர்த்தம், தென்மேற்கே பலாச தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் நடுநாயகமாக சந்திர புஷ்கரணி தீர்த்தம் இருக்கிறது. எனவே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், நவ தீர்த்த தலமாக கருதப்படுகிறது.

மன்மதன் கையில் கரும்பு வில் ஏன்?

மன்மதன் கையில் கரும்பு வில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு மறைமுகமான உண்மை இருக்கிறது. காதல் தேவதைகளாக வர்ணிக்கப்படும் ரதியும், மன்மதனும், தம்பதியர்களுக்கு அறிவுரை சொல்லும் விதத்திலேயே கரும்பு வில் உள்ளது. கரும்பு உயிரணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. எனவே ஆண்களுக்கு ஆண்மை பெருகவும், வாரிசுகள் பிறக்கவும் இந்தக் கரும்பு ஒரு மருத்துவப் பொருளாகவும், மகிழ்ச்சி தரும் இனிப்புப் பொருளாகவும் இருக்கிறது. கரும்பைச் சுவையுங்கள்.. சமர்த்தான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கரும்பில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருக்கிறது. கரும்புச் சாறும், இஞ்சிச் சாறும் கலந்து குடித்தால் நல்ல பசியெடுக்கும். ‘ஈறும், பல்லும் உறுதியாக இருக்க கரும்பைக் கடித்துத் திண்ண வேண்டும். இதனால் தான் ‘கரும்பைத் திண்ணக் கூலியா?’ என்ற பழமொழி உருவானது.

மேலும் செய்திகள்