வாஸ்து குறைகளை நீக்கும் பூலோகநாத சுவாமி

வீடு கட்டுதல், பழைய வீட்டின் அமைப்பு, வியாபார நிறுவனங்களின் அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோ‌ஷம் உள்ளதா?

Update: 2017-02-07 10:26 GMT
வீடு கட்டுதல், பழைய வீட்டின் அமைப்பு, வியாபார நிறுவனங்களின் அமைப்பு, நோக்கும் திசை, அறைகளின் நீளம், அகலம் என அனைத்திலும் வாஸ்து தோ‌ஷம் உள்ளதா? எனப் பார்ப்பது தற்போது அனைவரும் கடைப்பிடித்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.

இவை அனைத்திற்கும் காரணமான வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை கிடைக்கும்.

வாஸ்து ஆலயம்

இப்படிப்பட்ட வாஸ்து நாயகருக்கு திருச்சியில் ஓர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் பூலோகநாத சுவாமிதான், வாஸ்து நாயகராகத் திகழ்கிறார். இவர் வாஸ்து தோ‌ஷங்களை நீக்கும் வல்லமை படைத்தவர். இவரிடம் வாஸ்து தொடர்பான குறைபாடுகளைக் கூறி பிரார்த்தனை செய்துக் கொண்டால் அவை அறவே தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் வாஸ்து நாட்களில், சிறப்பு வாஸ்து ஹோமம் நடத்தப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களும், பழைய, புதிய வீட்டில் தோ‌ஷம் இருப்பதாக கருதுபவர்களும், வாஸ்து நாட்களில் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால் வாஸ்து தோ‌ஷம் நீங்கும். மற்றவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும்.

வாஸ்து ஹோமத்தன்று, பூமிக்கு அடியில் விளையும் பெரும்பாலான கிழங்குகளைக் கொண்டு, விசே‌ஷ கதம்ப கிழங்குகள் சாதம் தயாரித்து வாஸ்து பகவானுக்கு படையல் இடப்படுகிறது. பின்னர் இதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகம் செய்கின்றனர்.

ஆலய அமைப்பு

இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் வெளியே இடது புறம் விநாயகர், வலது புறம் முருகன் மற்றும் கருப்பண்ணசாமி சன்னிதிகள் உள்ளன. கோபுரத்தை தாண்டியதும் அகன்ற பிரகாரமும், கொடிமரம், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள ஹோம மண்டபத்தின் வலது புறம் இறைவி ஜெகதாம்பிகையின் சன்னிதி உள்ளது.

இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் கரங்களில் பத்மம் மற்றும் அல்லி மலரைத் தாங்கியுள்ள அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.

முன்புறம் இரு துவாரபாலகர்கள் கொலுவிருக்க, அடுத்துள்ளது மகா மண்டபம். மகாமண்டப நுழைவாயிலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி– தெய்வானையுடன், முருகனும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் பூலோகநாத சுவாமி லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

பரிவார தெய்வங்கள்

இறைவனின் தேவக் கோட்டத்தின் தெற்கில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையும், பிரம்மாவும் அருள்பாலிக்கின்றனர்.

ஆலய திருச்சுற்றில் மேற்கில் தல விருட்சமான வன்னிமரம், வன்னிமர விநாயகர், சப்த கன்னியர், நாகாபரண விநாயகர், காசி விசுவநாதர், ஆஞ்சநேயர், வள்ளி–தெய்வானை சமேத முருகன் ஆகியோரும், வடக்கில் சண்டீகேசுவரர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும், கால பைரவரும் வீற்றிருக்கின்றனர்.

மூலவருக்கு வாஸ்து நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 800 பேர் கலந்து கொள்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது உண்டு. சிவராத்திரி அன்று இறைவனுக்கும், இறைவிக்கும் விசே‌ஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அன்று நடைபெறும் அபிஷேகங்களை கண்டுகளிக்கின்றனர்.

சித்திரை முதல் நாள் பொங்கல், கார்த்திகை, மார்கழி 30 நாட்கள் என அனைத்து விசே‌ஷ நாட்களிலும் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்திற்கு அத்தி, மகிழம், வன்னி, வில்வம், குருந்தை என ஐந்து தல விருட்சங்கள் உண்டு. தைப்பூசம், மாசிமகம், ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் இறைவன் இறைவி வீதியுலா வருவதுண்டு.

பிரதோ‌ஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற பொருட்களை வழங்கி அருள் பெருகின்றனர்.

தினசரி 4 கால ஆராதனை நடைபெறும் இந்த ஆலயம் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீ பூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

–ஜெயவண்ணன்.

பக்தியின் பலன்

ஆலயத்தில் இருக்கும் தல விருட்சமான வன்னி மரத்தையும், அருகே இருக்கும் வன்னிமர விநாயகரையும் வலம் வந்து வேண்டிக்கொண்டு, அருகே இருக்கும் கன்னிமார் களையும் வேண்டிக் கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறுவது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

கிழக்கு திருச்சுற்றில் இருக்கும் நாகாபரண விநாயகர் தனது இடுப்பில் நாகப்பாம்பினை சுற்றியபடி காட்சி தருகிறார். இவரை அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்வதால் நாக தோ‌ஷம் விலகும் என்பதும் நிஜமே!

மேலும் செய்திகள்