கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2017-02-24 22:32 GMT

மீன்சுருட்டி,

பிரகதீஸ்வரர் கோவில்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான பிரகதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கை நதிக்கரை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக கலைநயத்துடன் இந்த கோவில் கட்டப்பட்டதாகும்.

மேலும் உலக புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இக்கோவில் சிறந்த ஆன்மிக சுற்றுலாதலமாகவும் விளங்கி வருகிறது.இந்த கோவிலில் கடந்த 1932–ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. தற்போது 85 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2–ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகாசிவராத்திரி விழா

முன்னதாக நேற்று மாலை 4.30 மணி அளவில் பிரதோ‌ஷ விழா நடைபெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 4 கால பூஜையுடன் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. முதல் கால பூஜை இரவு 7.30–க்கும், 2–ம் கால பூஜை 10.30 மணிக்கும், நள்ளிரவு 3–ம் கால பூஜை 1.30 க்கும், இன்று அதிகாலை 4–ம் கால பூஜை 4.30 மணி அளவிலும் நடைபெற்றன.

இந்த பூஜையில் உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டுஇரவு முழுவதும் பரத நாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதற்கான விழா ஏற்பாடுகளை கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்