நிறைந்த செல்வம் அருளும் கோட்டூர் கொழுந்தீஸ்வரர்

சோழவளநாட்டின் காவிரி தென்கரையில் திருத்துறைப்பூண்டி– மன்னார்குடி இடையில் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

Update: 2017-04-11 01:30 GMT
சோழவளநாட்டின் காவிரி தென்கரையில் திருத்துறைப்பூண்டி– மன்னார்குடி இடையில் கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளுடையது இத்தலம். ‘கொந்துலாமலர் விரிபொழிற் கோட்டூர் நற்கொழுந்தினை’ என்று திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ஆலயம் இது. இந்த தலத்தில் கொழுந்துநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். இறைவியின் திருநாமம் தேன்மொழிப் பாவை என்பதாகும்.

ஒரு சமயம் இந்திரனின் சபையில் ரம்பை, திலோத்தமை, மேனகை, ஊர்வசி, கெற்பை, பரிமளை, சுகேசி ஆகிய ஏழு தேவலோக மங்கைகள் நடனமாடி, தேவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். நடனம் முடிந்ததும் ரம்பை அருகில் இருந்த பூஞ்சோலையில் படுத்து உறங்கினாள். நடனமாடிய களைப்பில் உறங்கிய அவளது ஆடை சற்று விலகியிருந்தது.

அப்போது அந்த வழியாக வந்த நாரத மகரிஷி, இதனைக் கண்டு கோபம் அடைந்தார். ஒரு பெண் தன் ஆடை விலகியிருப்பதைக் கூட கவனிக்காதபடி தூங்குவதை சகிக்க முடியாத அவர், ரம்பையை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறக்கும்படி சபித்தார்.

கண் விழித்த ரம்பை நடந்தவற்றை அறிந்து, நாரதரை வணங்கினாள். தன்னுடைய சாபத்தை நீக்க வேண்டும் என்று மன்றாடினாள்.

இதையடுத்து நாரதர், ‘பூலோகத்தில் சிவபூஜை செய்தால் சாபம் நீங்கும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

பூமிக்கு வந்த ரம்பை, முதலில் பாலியாற்றங்கரையில் அமர்ந்து நீண்ட காலம் தவம் புரிந்தாள். அவளுக்கு சிவனருள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அந்த பகுதியில் இருந்த ரோமச மகரிஷியை வணங்கி தன்னுடைய நிலையை கூறினாள்.

அவரது வழிகாட்டுதலின்படி இத்தலத்தில் உள்ள கொழுந்தீசரை வணங்கினாள். வன்னி வனமாக இருந்த இந்த இடத்தில் சிவனை பூஜித்த ரம்பை, சிவ வழிபாட்டிற்காக ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கி, ஒற்றைக் காலில் நின்றபடி தவம் செய்தாள்.

இதற்கிடையில் ரம்பை இல்லாததால் தேவலோகம் பொலிவிழந்தது. நடந்ததை அறிந்த இந்திரன், ரம்பையை அழைத்து வருவதற்காக சித்திரசேனன் என்னும் கந்தர்வனை பூலோகம் அனுப்பினான். அவன் வந்து அழைத்தும், ‘சிவனருள் பெறாமல் தேவலோகம் வரமாட்டேன்’ என்று ரம்பை மறுத்து விட்டாள்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட இந்திரன், தனது வாகனமான ஐராவதத்தை அனுப்பி, ரம்பையை தூக்கி வரும்படி பணித்தான். பூலோகம் வந்த ஐராவதம் யானை, ரம்பையை தனது துதிக்கையால் வளைத்து தூக்க முயன்றது. அதைக் கண்டு அஞ்சிய ரம்பை, சிவலிங்கத்தைத் தாவி அணைத்துக் கொண்டாள். இதனால் கோபமுற்ற ஐராவதம், ‘இந்தச் சிவலிங்கத்தோடு உன்னை இந்திரலோகம் கொண்டு செல்வேன்’ என தனது தந்தத்தால் சிவலிங்கத்தைச் சுற்றிலும் தோண்டத் தொடங்கியது. ரம்பையின் அளவற்ற அன்பினால் நெகிழ்ந்த பரமன், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு, ஐராவதத்தை ஓங்கி உதைத்தார். அதன் உடல் பலவாறாக சிதறிட, அது ஓலமிட்டவண்ணம் உயிரைவிட்டது.

ரம்பைக்கு தரிசனம் தந்த இறைவன் அவளுக்கு, வரங்கள் பல தந்து மறைந்தார். ரம்பை சிவபூஜையை தொடர்ந்து செய்து வந்தாள். ஐராவதத்திற்கு ஏற்பட்ட நிலையை அறிந்த இந்திரன், சிவ பாதகம் செய்ததற்காக அஞ்சி, வன்னிவனம் அடைந்து, ரம்பை வழிபட்ட லிங்கத்தை அவளோடு இணைந்து வழிபட்டு வந்தான். பரமேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி, ஐராவதத்தை உயிர்பித்ததோடு, ரம்பையையும் இந்திரனுக்கு பணி செய்ய பணித்தார். ஐராவதத்தின் கொம்புகளாகிய கோட்டால், அகழப்பட்டதால் இத்தலம் ‘கோட்டூர்’ எனப் பெயர் பெற்றது.

ஊரின் நடுவில் அமைந்துள்ளது மேற்கு பார்த்த ஆலயம். உள்ளே கொடிமரம், பலிபீடத்திற்கு அடுத்தாற்போல் நந்தியெம்பெருமாள் வீற்றிருக்கிறார். இரண்டாம் வாசலின் மேல் மூன்று நிலை சிறிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மேற்குத் திருமாளிகைப் பத்தியில் வலப்புறம் வல்லப கணபதி சன்னிதி உள்ளது. பக்கத்தில் உற்சவர் அறை. அதன் வலது பக்கத்தில் சூரியன், இடதுபுறம், சந்திரன், விஷ்ணு லிங்கம், மூவர், வீரப்பத்திரர், ரம்பை, அணைத்தெழுந்தநாதர், அர்த்தநாரீஸ்வரர், பிரதோ‌ஷ நாயகர், பிரயோக சக்கர விஷ்ணு துர்க்கை என வரிசையாக தெய்வத் திரு மேனிகள் உள்ளன. சுப்ரமணியர், மீனாட்சி சுந்தரேசர் மற்றும் கஜலட்சுமிக்கு தனித்தனியே சன்னிதிகள் அமைந்துள்ளன.

ஒரே பிரகாரத்தைக் கொண்டு, நடுவில் மூடுமண்டப தளத்துடன் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகள் உயரிய பீடத்தின் மீது அமையப் பெற்றுள்ளன. முதலில் கிழக்கே திருமுகம் கொண்டு, சுவாமிக்கு எதிராக அபிமுகம் காட்டி, தனிச் சன்னிதியுள் அருள்புரிகின்றாள் அன்னை மதுர பாஷிணி. மேலிரு கரங்களில் ருத்ராட்சம், தாமரை மலரும் ஏந்தியிருக்கும் அன்னை, கீழிரு கரங்களில் அபயவரமளித்து, புன்னகை முகம் காட்டுகிறாள். அன்னையை தேனார்மொழியாள், மதுர வசனாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். லட்சுமி கடாட்சங்களை அருளுபவள் இவ்வன்னை! அம்பிகையை உளமார வணங்கி, பின் சுவாமி சன்னிதிக்கு செல்ல வேண்டும்.

சிறிய அர்த்த மண்டபத்தையடுத்து கருவறையில் ரம்பை பூஜித்து வரம் பெற்ற ஈசன் அருள்பாலிக்கிறார். முதலில் ‘ரம்பேஸ்வரர்’ என போற்றப்பட்டு வந்த இறைவன் தற்போது கொழுந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அருளால் அணைக்கும் அரனாரை வணங்கினால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.

அம்பாள் சன்னிதிக்கு அருகே தென்முகம் கொண்ட பள்ளியறையும், ஈசானத்தில் நவக்கிரகங்களும் அருகே அமுதக்கிணறும் அமைந்துள்ளன. ஐராவதம் அலறி வீழ்ந்த போது, அதன் தலைப் பகுதி வீழ்ந்த இடம் குளமானது. இக்குளமே ‘மண்டை தீர்த்தம்’ என்று பெயர் பெற்று விளங்கு கிறது. ஐராவதம் இங்கே மணலால் லிங்கம் பிடித்து, பூஜை செய்து தன் பழைய நிலையை அடைந்தது. ரம்பை தன் பெயரால் உண்டாக்கிய ரம்பை தீர்த்தம், இப்போது ‘கருப்பட்டியான் குளம்’ என வழங்கப்படுகிறது. ரம்பையின் தவக் கோல வடிவினை இந்த ஆலயத்தில் கண்டு மகிழலாம்.

திருக்கோவிலுக்கு முன்னே உள்ள தீர்த்தத்தில், அமுதகுடம் வைத்த பூஜித்து, உ‌ஷத் காலத்தில் தீர்த்தம் வழங்கியுள்ளார் தேவேந்திரன். இதனால் இத்தீர்த்தம் ‘அமுதகூபம்’ என வழங்கப்படுகிறது.

இங்குள்ள அம்பிகை உடனான பிரதோ‌ஷ மூர்த்தியை, பிரதோ‌ஷ காலத்தில் வழிபட்டால் சகல பாவ தோ‌ஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மற்றும் உமாமகேஸ்வரர் சிலாரூபங்கள் தம்பதி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. எனவே இவர்களை பவுர்ணமி நாளில் வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை கூடும். விஷ்ணு துர்க்கைக்கு ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளிலும், ராகு காலத்திலும் எலுமிச்சைப்பழம் தீபமேற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். அனைத்துவித கஷ்டங்களும் தீரும்.

தினமும் 6 கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 மணி முதல்  பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி– திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் கோட்டூர் உள்ளது.

–மரு.நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்