ஆன்மிகம்
பேரின்பம் தரும் நடராஜர் அபிஷேகம்

ஆனி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடராஜரும், அவருக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் தான்.
30-6-2017 ஆனித் திருமஞ்சனம்
பழங்கால, புகழ்பெற்ற கோவில்களில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில ஆலயங்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயம் உள்பட சில ஆலயங்களில், ஆண்டிற்கு ஆறு முறை மட்டுமே இறைவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன என்பது பலரும் அறியாததாகவே இருக்கலாம். இவற்றில் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடை பெறும் அபிஷேகம், ‘ஆனித் திருமஞ்சனம்’ என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களின் வாழ்வில் ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என ஆறு பொழுதுகள் இருக்கின்றது. இதில் தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில்தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும். அதே போல் மாசி மாதமானது தேவர்களுக்கு காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும்.

உச்சி கால பொழுதானது தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வரும். அந்த மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வரும் அபிஷேகம், உச்சிகால அபிஷேகமாக நடத்தப்படும். ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை நேர அபிஷேகம் செய்யப்படுகிறது. இதுவே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது.

அதே போல் ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். புரட்டாசி மாதம் அர்த்தஜாம வேளையாகும். எனவே ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகமும், புரட்டாசி மாதம் பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகமும் சிறப்பாக நடை பெறும்.

இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிதம்பரம் ஆலயத்தில் ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் இந்த சிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாத திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிமாத உத்திரத்தன்று நடைபெறும் அபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். தமிழ்நாட்டைப் போல இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம், ஈழத்துச் சிதம்பரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய சிவன் தலங்களிலும் ஆனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுகின்றன.

சிதம்பரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே சிற்சபையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி யளிக்கின்றனர். மார்கழி, ஆனி மாத மகோற்சவ புண்ணிய காலங்களில் நடை பெறும் ரத உற்சவத்தன்றும், மறுநாள் தரிசனத்தன்றும் மட்டுமே அம்மையப்பன் இருவரும் சிற்சபையை விட்டு எழுந்தருளி பக்தர் களுக்கு காட்சி அளிப்பார்கள்.

புனிதமும், மகத்துவமும் நிறந்த இந்த புண்ணிய தினத்தில், சிவன் கோவிலுக்கு சென்று இறைவனையும், இறைவியையும் வழிபடுவது வாழ்வை சிறப்பாக்க வழி வகுக்கும். அன்றையதினம் அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இறைவனை வேண்டி நோன்பு இருப்பதும் நற்கதியை வழங்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே, தங்கள் பூஜை அறையில் வைத்து இறைவனை வணங்கி, அவரது புகழ்பாடும் பாடல்களை பாராயணம் செய்யலாம்.