ஆன்மிகம்
பக்தனிடம் இருந்து இறைவன் பெறும் நன்மை

இறைவன் படைப்பில் மனிதர்கள், முதலாளிகள் முதல் தரித்திரர்கள் என பல்வகைப்படுகின்றனர். அந்தந்த காலத்தில் அதை மனிதர்களுக்கு வரவழைக்கிறார்.
இறைவன் படைப்பில் மனிதர்கள், முதலாளிகள் முதல் தரித்திரர்கள் என பல்வகைப்படுகின்றனர். அந்தந்த காலத்தில் அதை மனிதர்களுக்கு வரவழைக்கிறார். வாழ்வில் உயர்ந்திருப்பவர்கள், தங்களிலும் தாழ்ந்திருப்பவர்களை ஆதரிக்க வேண்டும் என்பது எல்லா மனிதர் மேலும் இறைவன் ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தமாக இருக்கிறது.

‘தரித்திரனை அலட்சியப்படுத்துவது, அவனை உண்டாக்கிய இறைவனை அவமானப்படுத்துவதற்குச் சமமான பாவமாகும்’ (நீதி.14:31).

அதாவது, வியாதியுள்ளவனுக்கு பணம் கொடுப்பது அல்லது சிகிச்சைக்கு உதவுவது; வாழ்வாதாரத்துக்கான வசதி இல்லாதவனுக்கு உதவுவது; சிறிய தவறினாலோ, தரித்திரத்தினாலோ சிறைப்பட்டு அல்லது அடிமைப்பட்டு போனவர்களை மீட்க முயல்வது என எத்தனையோ தான, தர்மங்களைச் செய்ய இறைவன் எல்லாருக்குமே அவர்களது சுற்றுப்புறத்தில் வாய்ப்பு அளிக்கிறார்.

பக்தி வாழ்க்கையில் உள்ளவன், இயல்பு வாழ்க்கை வாழ்பவன், பாவ வாழ்க்கையில் உழல்பவன், இறைவனே இல்லை என்பவன் ஆகிய எல்லாருக்குமே மனசாட்சி மூலம் அதற்கான (உதவுவதற்கான) தூண்டுதலை இறைவன் அளித்துள்ளார்.

உலகத் தேவைகளுக்காக தவித்து நிற்கும் மனிதனுக்கோ, பிற உயிரினங்களுக்கோ இதுபோன்ற உதவிகளை செய்வது, அனைத்துத் தரப்பு மனிதர்கள் மீதும் விழுந்த கடமைகளுள் ஒன்றாக இருக்கிறது.

இதுபோன்ற உதவிகளை செய்ய விரும்பினாலும், ஏழைப்பட்டவனால் முழுமையாகச் செய்துவிட முடியாது. ஆனால் இதுபோன்ற உலக காரியங்களில் ஆதரவளிக்கும் நிலைகளையும் தாண்டி, மேலும் ஒரு நன்மையான காரியத்தை தன் பக்தனிடம் (ஏழை மற்றும் பணக்கார பக்தர்களிடம்) இறைவன் எதிர்பார்க்கிறார். அதுவே இறைவனுக்கு செய்யும் நன்மை என்று இயேசு தனது சீடர்களிடம் கூறியிருக்கிறார் (மத்.25:35-40).

உலக வாழ்க்கையை நிறைவு செய்த பின்னர் ஒவ்வொருவரும் தனது பேச்சு, பார்வை, எண்ணம், நடத்தை ஆகிய ஒவ்வொன்றுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டிய கடைசி நியாயத்தீர்ப்பு அன்று நடக்கும் சம்பவம் பற்றி சீடர்களிடம் இயேசு பேசினார்.

இறைநீதிப்படி நடந்த பக்தர்களை மற்றவர்களிடம் இருந்து தனியாகப் பிரித்து தனது அரசாட்சிக்கு இறைவன் அழைத்துச் செல்வதற்கு முன்பு, ‘பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்’ என்பார்.

நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ‘ஆண்டவரே... நாங்கள் எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்’.

அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: ‘மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்’ என்று அந்த வசனங்கள் கூறுகின்றன.

இந்த வசனத்தில் பல ஏழைகளுக்கு சோறு போட்டது, பணம் கொடுத்தது போன்ற தான தர்ம காரியங்களை செய்ததுபற்றி இயேசு குறிப்பிடவில்லை.

சிறியவன் ஒருவனுக்கு என்று ஒருமையில் இயேசு குறிப்பிடு கிறார். வசனத்தில் இயேசு குறிப்பிடும் அந்த சிறியவன் ஒருவன் யார்? அவனுக்கு பக்தனால் செய்யப்பட்ட நன்மைகள் என்னென்ன? என்பது கேள்வியாக எழுகிறது.

பகைப்பவனை நேசித்தல், அடிப்பவனை மன்னித்தல், தூஷிப்பவனின் நலனுக்காக ஜெபித்தல், கேட்பவனுக்கு விட்டுக் கொடுத்தல் என்ற அன்பின் அடிப்படையிலான பல நன்நடத்தையை வேதம் படித்தவன் தனது நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றியாக வேண்டும் என்பது இறைக்கட்டளை.

பொறாமை, எரிச்சல், கோபம், பாகுபாடு, பகை போன்ற குணங்கள் இல்லாத அந்த அன்பின் பாதையில் செல்லும் கிறிஸ்தவன் போகுமிடம் எல்லாம் அமைதியும் சமாதானமும் சந்தோஷமும் நற்பெயரும் இறைவனால் உண்டாகிறது.

பாவக்கட்டுகள் இல்லாத சரீரம், இதயம், ஆத்மாவை பெற்றிருக்கும் அந்த கிறிஸ்தவனைப் பார்க்கும் மற்றவர்களுக்கு, தானும் அதுபோன்ற தன்மைகளை பெற வேண்டும் என்ற பசி, தாகம், பாவ விடுதலைக்கான வேட்கை எழுகிறது.

இயேசுவின் மார்க்கத்துக்கு அந்நியனாக இருந்த அப்படிப்பட்டவனின் ஆத்தும பசி, தாகத்துக்கு தேவையான போதனையை தனது தாலந்துக்கு ஏற்றார்போல் கொடுத்து, ஆத்தும நோயில் இருந்தும், பாவக்கட்டுகளில் இருந்தும் விடுவிக்கும் சத்தியத்தைக் காட்டி, பாவ மீட்பு என்ற வஸ்திரத்தால் அவனை மூடும் பக்தனே இயேசுவால் அன்று நீதிமான் என்று அழைக்கப்படுவான்.

இந்த சத்திய மார்க்கத்துக்கு விலகியிருப்பவர்களையே சிறியவர்கள் என்றும் அவர்களை தனது சகோதரர் என்றும் குறிப்பிடும் இயேசு, குறைந்தபட்சம் அவர்களில் ஒருவனையாவது அந்த வகையில் மீட்டுக்கொள்பவனே, இறைவனுக்கு நன்மை செய்பவன் என்றும் அவனே இறைஆட்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவான் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.