இஸ்லாம் : பெரும் புறம்

அடுத்தவர்களைக் குறித்து அவதூறு பேசுவது, ‘புறம்’ என்று நமக்குத் தெரியும். ஆனால், புறத்திலேயே பெரும் புறம் எது தெரியுமா? மார்க்கப் பற்றுமிக்க, மக்களிடையே கண்ணியம் பெற்ற அறிஞர்களையும் மேன்மக்களையும் குறித்து பேசும் புறம்தான்.

Update: 2017-11-14 08:09 GMT
ழைப்பாளர்களைக் குறித்தும், அறிஞர்களைக் குறித்தும், இமாம்களைக் குறித்தும், மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்களைக் குறித்தும் பேசும் புறம் பெரும் குற்றமே. அவர்களுடைய வாகனத்தைக் குறித்தோ, ஆடையைக் குறித்தோ, நிறத்தைக் குறித்தோ, காலணிகளைக் குறித்தோ பேசும் புறத்தைக் குறித்தல்ல நாம் இங்கே அலசுகிறோம். மாறாக, அவர்களுடைய தாடியைக் குறித்தும், கரண்டைக்காலுக்கு மேலாக அவர்கள் அணிந்திருக்கும் ஆடையைக் குறித்தும், அவர்களுடைய உரைகளைக் குறித்தும் (பயான்) குறித்தும், அவர்களுடைய மார்க்க அடையாளங்களைக் குறித்தும் பேசும் புறம்தான் பெரிய புறம்.

ஏனெனில், இவ்வாறு பேசும் புறம் என்பது மார்க்கத்துடன் விளையாடும் விளையாட்டு. தாடி வைக்குமாறு உத்தரவிட்டது யார்? நபி (ஸல்) அவர்கள்தானே. கரண்டைக் காலுக்கு மேலாக ஆடை அணியுமாறு கூறியது யார்? நபி (ஸல்) அவர்கள்தானே. மக்களுக்கு உபதேசம் செய்யுமாறு ஏவியது யார்? நபி (ஸல்) அவர்கள்தானே. ஆக.. இந்த விவகாரங்களில் அறிஞர்களைக் குறித்து கேலியும் கிண்டலும் செய்வது என்பது மார்க்கத்துடன் விளையாடும் ஒருவகை ஆபத்தான விளையாட்டு.

தபூக் போரிலிருந்து நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் திரும்பிக்கொண்டிருந்தனர். பாதை நெடுகிலும் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் உரையாடிக்கொண்டே வந்தார்கள். பெரும் நபித் தோழர்கள் பெருமானாரைச் சுற்றியே எப்போதும் இருந்தனர்.

கூட்டத்தில் ஒருசில நயவஞ்சகர்களும் இருந்தனர். நயவஞ்சகர் களின் கண்களுக்கு இக்காட்சி பெரும் வெறுப்பைத் தந்தது. பொறாமையில் வெந்தனர். அந்தத் தோழர்களைக் குறித்து தங்களிடையே கேலி பேசிச் சிரித்தனர். வெறுப்பை உமிழ்ந்தனர்.

மட்சிபின் ஹுமைர் எனும் நயவஞ்சகர்களில் ஒருவன் கூறினான்: ‘இந்த வயோதிகர்களைப் போன்ற மோசமானவர்கள் எவரையும் நான் பார்த்ததே இல்லை. சாப்பிடுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். வயிறு மட்டுமே வளர்ந்துள்ளது. நாவில் வருவது எல்லாமே பொய். எதிரிகளைக் கண்டால் இவர்களைப் போன்று ஓடிப்போகும் கோழைகள் எவரும் இல்லை. போர் என்றால் என்னவென்றே தெரியாது.’

இந்த வார்த்தைகளை தன்னுடைய தோழர்களிடம் அவன் கூற, நயவஞ்சகர்கள் அனைவரும் ஒன்றுகூடிச் சிரித்தனர்.

அவ்ஃப் பின் மாலிக் (ரலி) இந்த வார்த்தைகளை செவியுற்றார். அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமது தோழர்களைக் குறித்து இவர் எங்ஙனம் இப்படிப் பேசலாம். அவர்களது கண்ணியத்தைக் குறைக்கும் முகமாக அல்லவா இவர் பேசுகின்றார்.

அவ்ஃப் பின் மாலிக் (ரலி) மட்சிபிடம் கூறினார்: ‘பொய் சொல்கின்றாய். நீ ஒரு நயவஞ்சகன். நீ பேசியதை நான் அல்லாஹ்வின் தூதரிடம் கூறுவேன்.’

பின்னர் அங்கிருந்து எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வேகமாகச் சென்றார்.

ஆயினும் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து சேருவதற்கு முன்னரே ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணிலிருந்து வேத வெளிப்பாட்டுடன் (வஹி) இறங்கி வந்தார்கள். அல்லாஹ் இவ்வாறு வசனம் இறக்கியருளினான்:

“(நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் கூறுவர் நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும்தான் பேசிக்கொண்டிருந்தோம்.” அவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும்தான் நீங்கள் பரிகாசம் செய்துகொண்டிருக்க வேண்டுமா? உங்கள் தவறுகளை நீங்கள் நியாயப்படுத்த வேண்டாம். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டபின் திண்ணமாக நிராகரித்துவிட்டீர்கள்.” (9:65,66)

ஒருசில வினாடிகள்தான். அதற்குள் அல்லாஹ்வின் வேத வசனம் இறங்கிவிட்டது. ஆம், விளையாடுவதற்கும் நகைச்சுவை பேசுவதற்கும் அல்லாஹ்வின் மார்க்கம்தான் உங்களுக்குக் கிடைத்ததா? வாய்க்கு வந்தபடி வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதுவதற்கும் கேலி பேசுவதற்கும் இறை மார்க்கம்தான் கிடைத்ததா? இதுதான் அல்லாஹ்வின் கேள்வி.

30 ஆயிரத்துக்கும் அதிகமான தோழர்களுக்கு மத்தியில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். கேலிபேசி கிண்டலடித்துக்கொண்டிருந்தவர்கள் யார் என்று தெரியவந்தது. மன்னிப்புக் கோரியவர்களாக பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஓடோடி வந்தனர். நபி (ஸல்) அவர்களோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மார்க்கத்துடனா விளையாட்டு..? நகைச்சுவை பேச உங்களுக்கு வேறு விஷயமா கிடைக்கவில்லை..?

நபி (ஸல்) அவர்களோ இந்த வசனத்தையே மீண்டும் மீண்டும் ஓதிக்கொண்டேஇருந்தார்கள். நயவஞ்சகர்கள் அனைவரும் பெருமானார் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டபோது தோழர்களிடம், உடனே அந்த இடத்திலிருந்து புறப்படுமாறு கூறியவாறு தம்முடைய ஒட்டகத்தில் ஏறி நபி (ஸல்) அவர்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: மட்சிபின் ஹுமைர் எனும் அந்த நயவஞ்சகன் நபிகளாரின் ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறைப் பிடித்தவாறு பின்னால் ஓடிவந்தான். அவனுடைய பாதங்கள் கற்களில் இடறியது. ஆயினும் விடாமல் அவன் ஓடிவந்தான். ஓடிவரும்போது இவ்வாறு கூறினான்: ‘அல்லாஹ்வின் தூதரே! அது வெறுமனே நாங்கள் பேசிய பேச்சு. பொழுதுபோக்கிற்காகவும் தமாஷாகவும் நாங்கள் பேசியது. பயணத்தில் நேரம் போவதற்காக நாங்கள் பேசியது’ என்று கூறியவாறே பின்னால் ஓடிவந்தான்.

பெருமானார் (ஸல்) அவர்களோ மீண்டும் மீண்டும் அந்த வசனத்தையே ஓதினார்களே தவிர அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. (இப்னு கஸீர்)

நம்பிக்கையாளர்களின் மார்க்கப் பற்று குறித்தும் அவர்களது அடையாளங்கள் குறித்தும் கேலியும் கிண்டலும் பேசாமல் யார் தமது நாவைப் பாதுகாத்து கொண்டாரோ அவரே மறுமையில் முழுமையாக வெற்றி பெற்றவர். நாவின் மூலம் நமது நன்மைகளை நாமே இழக்கலாமா?

-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல். 

மேலும் செய்திகள்