துன்பங்கள் நீங்க..

சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில், அவருக்கு நிழல் தருவது உத்தால மரம். இந்த மரத்தை பூலோகத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தரிசிக்க முடியும்.

Update: 2018-01-30 06:25 GMT
அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் உள்ள உத்தவேதீஸ்வரர் ஆலயம். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த இடம் தஞ்சாவூர் அருகே உள்ள திருமணஞ்சேரி திருத்தலம். அந்த திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இடமாக, குத்தாலம் திருத்தலம் சொல்லப்படுகிறது. அந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு உத்தால மரம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான், கல்யாண சனீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பிரிந்த தம்பதியர் சேர..

திருவையாறுக்கு அருகே உள்ளது ரதிவரபுரம் என்னும் திருநல்லூர் திருத்தலம். இங்கு கார்கோடேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஈசன் அருள்பாலித்து வருகிறார். பாம்புகளின் அரசனான கார்கோடகன், இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபாடு செய்ததால் இத்தல இறைவனுக்கு கார்கோடேஸ்வரர் என்று பெயர் வந்ததாம். இறைவனின் திருநாமம் காமரசவல்லி. மன்மதனுக்கு உயிர்பிச்சை அளிக்க வேண்டி, அவனது மனைவி ரதி தேவி இத்தல இறைவியை வழிபட்டதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தன் கணவனின் உயிரைத் திருப்பித்தர வேண்டி கடும் தவம் செய்த ரதி தேவிக்கு, சிவபெருமான் அருள் செய்த திருத் தலம் இதுவாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும், திருமானூர் என்ற இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஏலாக்குறிச்சி என்ற இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

பாவங்கள் அகல..

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. சிதம்பரத்தை வழிபட்டால் முக்தி. இந்த வரிசையில் சிதம்பரத்தைப் போலவே, இறைவனை தரிசிப்பதால் முக்தியைத் தரும் ஆலயமாக பாபநாத சுவாமி கோவில் திகழ்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. பாபநாசத்தில் ஓடும் தாமிரபரணியில் குளித்தாலே நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இந்த ஆலயம் 7 நிலை மற்றும் 7 கலசங்களுடன் 100 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது.

கிரக தோஷம் விலக..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகாமசுந்தரி சமேத திருத்தனிநாதர் திருக்கோவில் இருக்கிறது. இங்கு தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார், யோக பைரவர். இவரை ஆதி பைரவர் என்றும் அழைக்கிறார்கள். இவரிடம் இருந்து தான் அஷ்ட பைரவர்களான அசிதாவக பைரவர், உரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் தோன்றினர் என்கிறது புராணம். இந்த எட்டு பைரவர்களில் ஒவ்வொன்றில் இருந்தும் எட்டு எட்டாக, ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களை பைரவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இவற்றில் சில பைரவர் வாகனங்களோடும், சில வாகனங்கள் இல்லாமலும் பல பகுதிகளில் காட்சியளிப்பதை நாம் காணலாம்.

மனிதர்களை ஆட்டிப்படைப்பது கிரகங்கள். அந்த கிரகங்களை ஆட்டி வைத்து ஆட்சி செய்பவர், யோக பைரவர். ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் போதும், யோக பைரவரை வணங்கி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

மேலும் செய்திகள்