ஆன்மிகம்
தட்சனின் ஆணவத்தை அழித்த வீரபத்திரர்

சாதாரண மனிதர்களின் கோபத்தாலேயே பல துன்பங்கள் நேர்கின்றன. அப்படியிருக்க, இறைவன் கோபம் கொண்டால் என்ன ஆகும்?.
பார் போற்றும் பேரூர் புராணம்

கோபம்- இது நம்முள் எழும் போது என்ன செய்கிறோம் என்றே நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கோபம் நம்முடைய நன்மதிப்பைக் கெடுத்து விடும். எனவே தான் கோபத்தை விட்டொழியுங்கள் என்று வலியறுத்துகிறார் வள்ளுவர். நாம் கோபப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது. ஆகையால் கோபத்தை அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும்.

சாதாரண மனிதர்களின் கோபத்தாலேயே பல துன்பங்கள் நேர்கின்றன. அப்படியிருக்க, இறைவன் கோபம் கொண்டால் என்ன ஆகும்?.

தன்னை அழைக்காமல் பிரம்மா, திருமால், முக்கோடி தேவர்களை அழைத்து தனது மாமனார் தட்சன் யாகம் நடத்துகிறார் என்பதை அறிந்ததும் சிவபெருமானுக்கு கோபம் உண்டானது. அந்த யாகத்திற்குச் செல்லக்கூடாது என்று தன் மனைவி பார்வதியிடம் கூறினார்.

ஆனால் பார்வதிதேவியோ, ‘சுவாமி! நான் சென்று, எனது தந்தையிடம் மருமகனை அழைக்காமல் யாகம் நடத்துவது தர்ம நெறியாகுமா?’ என்று கேட்கிறேன் என்றாள்.

‘தேவி! தட்சனுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. நீ அங்கே போய் என்ன சொன்னாலும் அது அவனது காதில் ஏறாது. நீ சென்று அவமானப் படாதே’ என்றார் ஈசன்.

பார்வதியோ, ‘பரமன் என்றால் யார் என்று என் தந்தைக்கு புரிய வைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு யாகம் நடந்த இடத்திற்குச் சென்றாள்.

அங்கு.. பார்வதியை வரவேற்காமல், மற்ற பிள்ளைகள், மருமகன்களை தட்சன் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் ‘தந்தையே! தாங்கள் நடத்தும் இந்த யாகத்தில் மூத்த மருமகன் பரமன் வந்தால் தானே பெருமை. அவரை அழைக்காமல் நீங்கள் இங்கு யாகம் நடத்துவது சரியா?’ என்றாள், பார்வதி தேவி.

‘பரமனா?.. யார் அவன்?.. சுடுகாட்டில் பேய் பிசாசுகளுடன் சுற்றித் திரிபவன் தானே அவன். அவனை அழைத்து யாகம் நடத்த வேண்டும் என்பதில்லை. நீ அவனுடன் இருப்பதால் உன்னையும் அழைக்கவில்லை. அழைக்காத இடத்திற்கு நீ ஏன் வந்தாய்?’ என்று அகந்தையுடன் பேசினான், தட்சன்.

முக்கோடி தேவர்களின் முன்பாக தன் இறைவனை பழித்துப் பேசிய தட்சனிடம், ‘பரமன் யார் என்பதை அறியாத நீ செய்யும் யாகம் அழிந்து போகட்டும்’ என்று பார்வதிதேவி சாபமிட்டு விட்டு கயிலாயம் திரும்பினாள்.

தன் மனைவியை அவமானப்படுத்திய தட்சனுக்கு பாடம் புகட்ட நினைத்த பரமன், வீரபத்திரரை அழைத்து தட்சனின் யாகத்தை அழிக்க உத்தரவிட்டார். உமா தேவியும் வீரபத்திரருக்கு உறு துணையாக காளிதேவியை அனுப்பி வைத்தாள். வீரபத்திரரும், காளிதேவியும் தட்சன் நடத்தும் யாகத்தை அழித்தனர். அப்போது அங்கு கூடி இருந்த முக்கோடிதேவர்கள், முனிவர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடினார்கள்.

பின்னாளில் காசிப முனிவர், மாயையுடன் இல்லற வாழ்க்கை நடத்தி சூரன், சிங்கமுகன், தாரகன் ஆகிய பிள்ளைகளைப் பெற்றார். இவர்கள் மூவரும் பல்வேறு வேள்விகளை நடத்தி, சிவபெருமானிடம் இருந்து வரம் பல பெற்றனர். அந்த வரங்களின் வலிமையால் தேவர்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தினர். ஈசனை அழைக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதால் தேவர்களுக்கு இந்த நிலை உண்டானது.

தேவர்கள் அனைவரும் கயிலாயநாதரை வணங்கி, ‘இறைவா! நீங்கள் கொடுத்த வரங்களை கொண்டு சூரன் சகோதரர்கள் எங்களை துன்புறுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து எங்களை காத்தருள வேண்டும்’ என்று வேண்டினர்.

அப்போது பரமன், ‘நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம். அந்த சூரனின் கொடுமைகளை அழிக்க, என் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறுமுகன் பிறப்பான். எனவே அசுரர் பயம், பிணி, துன்பங்கள் நீங்க அந்த முருகனின் உருவமாகிய மருதவரைக்கு சென்று வழிபடுங்கள்’ என்று அருள்பாலித்தார்.

இதைத் தொடர்ந்து சூரனை அழிக்க வேண்டி திருமால் மற்றும் தேவாதி தேவர்கள் சிவலிங்க பூஜை செய்து, மருதவரையில் முருகப்பெருமானை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினார்கள். இந்த மருதவரையே தற்போது ‘மருதமலை’ என்று அழைக்கப்படுகிறது. இது கோவையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

தேவர்கள் தவம் செய்து கொண்டிருந்த பகுதிக்கு வந்தார் நாரதர். அவரை உபசரித்த மகாவிஷ்ணு, ‘முருகனின் திருவருள் விரைந்து கிடைக்க என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

அதற்கு நாரதர், ‘சிவ தர்மங்களில், பூஜை சிறந்தது. அந்த பூஜை உபசாரங்கள் பலவற்றுள் அபிஷேகம், தீபம், அர்ச்சனை, நைவேத்தியம், அலங்காரம் ஆகிய ஐந்தும் சிறந்தவை. இவற்றை 12 மண்டலங்கள் செய்தால், நினைத்த நற்காரியங்கள் நிறைவேறும். அதிலும் அபிஷேகத்தை, சூரிய உதயத்துக்கு முன்பாகச் செய்தால் இந்த பிறவியிலேயே நினைத்த காரியம் நிறைவேறும்’ என்றார்.

இதையடுத்து மருதமலையில் மருத மரங்கள் சூழ எழுந்தருளிய முருகக்கடவுளுக்கு, நாரதர் கூறியபடி நித்ய பூஜைகளை மகாவிஷ்ணுவும், தேவர்களும் செய்தனர். இவர்களது பூஜையில் அகம் மகிழ்ந்த முருகன், அவர்கள் முன் தோன்றி ‘நீங்கள் விரும்பிய சூர வதம் விரைவில் நடந்தேறும்’ என்று அருள்பாலித்து மறைந்தார்.

அதன்படியே வீரபாகுதேவர் உள்ளிட்ட படைத் தலைவர்களுடன் சென்று தாரகன், சிங்கமுகன், சூரன் ஆகியோரை வதம் செய்தார் முருகப்பெருமான். அதன்பிறகு தேவர்களை விண்ணுலகத்தில் விட்டு விட்டு, மீண்டும் பூலோகம் வந்து திருப்பேரூரை அடைந்து, ஆதிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். பின்னர் மருதமலையில் அமர்ந்து அருள்பாலித்தார்.