ஆன்மிகம்
இஸ்லாம் வலியுறுத்தும் கருணை

எல்லா உயிர்களிடமும் இரக்கமும் கருணையும் காட்டுவதே மனிதப்பண்பாகும். நபிகளாரின் வாழ்வெங்கும் இந்த கருணை பரந்து விரிந்திருந்தது.
நபிகளாரின் மென்மையான குணத்தையும், மன்னிக்கும் தன்மையையும் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘‘அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர் களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர் களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்   படுத்துவோரை நேசிக்கின்றான்’’ (3:159).

நபிகளார் எல்லா உயிர்களிடத்தும் காட்டிய இரக்கமும் கருணையுமே அனைவரையும் ஈர்த்து நின்றது என்பதை மேற்சொன்ன இறை வசனம் நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. நபி   களார் கருணை நிறைந்தவர்களாக விளங்கினார்கள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. அவற்றில் ஒன்றை இங்கு காண்போம்.

கிழட்டு ஒட்டகம் ஒன்று ஓடோடி மூச்சிறைக்க நபிகளாரின் முன்வந்து நின்றது. அதனை பிடித்து அறுப்பதற்காக ஒருவர் கத்தியுடன் வந்து நின்றார். அவரிடம், ‘என்ன காரணத்திற்காக இதனை விரட்டுகிறீர்’ என்றார்கள், அவரோ, ‘இந்த ஒட்டகம் வயதாகி கிழடாகி விட்டது. இதனால் பலன் ஏதும் இல்லை, ஆகவே இதனை அறுத்து உணவாக்கவே விரட்டி வந்தேன்’ என்றார்.

அதற்கு நபிகளார், ‘இந்த ஒட்டகம் எவ்வளவு காலமாக உம்மிடம் இருக்கிறது. அதனால் நீர் என்ன பயன் அடைந்தீர்?’ என்று கேட்டார்கள். ‘இதன் தாய் இதனை எங்கள் வீட்டில் தான் ஈன்றது, குட்டியில் இருந்தே நாங்கள் தான் இதனை வளர்த்து வருகின்றோம், இது பல குட்டிகளை எங்களுக்கு ஈன்று தந்துள்ளது. அதிகமான பாலையும் தந்துள்ளது. விவசாயத்திற்கும் பயன்பட்டது, நல்ல வாகனமாகவும் இருந்தது’ என்றார்.

அதற்கு காருண்ய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இவ்வளவு உதவி செய்த இந்த கிழட்டு ஒட்டகத்திற்கு இது தான் நீர் செய்யும் கைமாறா?, அதனை அறுக்க கூடாது. இந்த ஒட்டகம் இயற்கையாக மரணிக்கும் வரை, அதற்கு உணவும், தண்ணீரும், உறைவிடமும் தந்து, அது இறந்த பின் நல்ல     முறையில் அடக்கம் செய்வது உமது கடமை’ என்றார்கள்.

மிருகங்களை அளவுக்கு மீறி கடினமாக வேலை வாங்குவதை நபிகளார் தடுத்தார்கள். அதன் உடம்பில் சூடுபோடுவது, அவைகளை ஊசி கொண்டு குத்துவது, வேகமாக விரட்டுவது போன்ற இரக்கமற்ற செயல்களை செய்யக்கூடாது என்றார்கள். மேலும் பறவைகள் கூட்டில் உறங்கி கொண்டிருக்கும்போது கல்லெறிந்து அதனை கலைப்பதை கண்டித்தார்கள். இதுபோன்று உயிரினங்கள் மீது கருணையுடனும் இரக்கத்துடனுமே நபிகள் நடந்து கொண்டார்கள்.

‘ஒரு மனிதன் நியாயம் இன்றி கொல்லப்பட்டால், அது முழு மனித சமுதாயமும் கொல்லப்பட்டதற்கு சமமாகும்’ என்று கருணையின் உச்சத்தை மனித குலத்திற்கு தொட்டு காட்டியவர் நபிகளார்.

அசைபோட்டு உணவை உண்ணும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றையும், அலகினால் தானியங்களை கொத்தி உண்ணும் கோழி, புறா, காடை போன்ற பறவை இனங்களையும் இஸ்லாம் சில கட்டுப்பாடுகளுடன் இறைவனின் பெயர் கூறி அறுத்து, ரத்தத்தை வெளியேற்றி உண்ண அனுமதி அளிக்கிறது. இது தவிர ஏனைய புலால் உண்ணும் மிருகங்களையோ, பறவைகளையோ உண்ணுவது ஆகாது என்கிறது இஸ்லாம்.

இப்படி இஸ்லாம் அனுமதித்துள்ள விலங்குகளும், பறவைகளும் வேகமாக இனவிருத்தி செய்யக்கூடியவையாக இருக்கின்றன. இன்னும் இவற்றின் இறைச்சிகள், மனிதனின் உடல் நலத்திற்கும், பலத்திற்கும், தேவையாக இருக்கின்றது.

எல்லாவற்றையும் நன்கு அறிந்துள்ள இறைவன், எதை நாம் உண்ண வேண்டும்?, எதை நாம் உண்ணக்கூடாது? என்று கூறுகின்றானோ, அது நிச்சயமாக மனித குலத்திற்கு நலம் தருவதாகவே உள்ளது.

எந்த உயிரை எப்படி காப்பது, எந்த உயிரை எப்படி அழிப்பது, எந்த உயிரை காக்க எந்த உயிரை அழிக்க வேண்டும் என்பது போன்றவை இறைவன் நிர்ணயித்த காலச்சக்கரத்தின் படியே நடந்து வருகின்றது.

அவரவர் விருப்பப்படி இறைவன் அனுமதித்ததை உண்டு வாழ்வதே பட்டினி சாவில் இருந்து மனித குலத்தை பாதுகாக்கும் வழியாகும்.

அரக்க குணம் எவரிடம் இருப்பினும் அவர் கருணையை விட்டு மிக தூரமாக இருப்பதாகவே கருதப்படுவார். இரக்க குணம் எவரிடம் இருப்பினும் அவர் கருணைக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவே மதிக்கப்படுவார்.

எல்லா உயிர்களிடத்திலும் இரக்கமும், கருணையும் வைக்கின்ற மனித பண்பையே என்றென்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி,  நெல்லை மாவட்டம்.

தொடர்புடைய செய்திகள்

1. பொறாமை
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும்.
2. எந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்
“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக;
3. கடன் இல்லாத வாழ்க்கை...
கடனில்லாமல் வாழ்வது என்பது பெரும் பாக்கியம். அப்படி வாழ்க்கை அமைவதென்பது பெரிய சவால்.
4. எல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க செயல் எது?
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மிக சிறந்த ஞானவான்கள் பலர் இருப்பினும், அவர்களில் இருவரைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. மனிதப்பண்பை சிதறடிக்கும் ‘வெறுப்பு’
“ஓ நம்பிக்கையாளர்களே! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.