புதிய ஆசீர்வாதம்

ஆறு ஒரு பகுதியிலே ஓடினால் ஒரு செழிப்பு உண்டாகுமல்லவா? அதைப் போலவே உங்கள் வாழ்விலும் ஒரு செழிப்பை உண்டாக்குவார்.

Update: 2018-03-22 22:45 GMT
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.

இம்மட்டும் நடத்தின தேவன் இனிமேலும் ஆசீர்வாதமாக நடத்த வல்லவராக இருக்கிறார். ‘இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்’ ஏசாயா 43:19 இந்த வசனத்தின்படி நிச்சயமாகவே நம் அருமை ஆண்டவர் உங்கள் வாழ்விலே புதிய காரியத்தைச் செய்து உங்களை சந்தோ‌ஷப்படுத்துவாராக. எப்படிப்பட்ட புதிய காரியங்களைச் செய்யப்போகிறார் என்பதை ஜெபத்தோடு தியானிப்போம். 

வனாந்தரத்தில் வழி

‘‘நான் வனாந்தரத்திலே வழியை... உண்டாக்குவேன்’’. ஏசாயா 43:19

வனாந்தரம் என்றால் ஒரு வழியுமே இல்லாத ஒரு இடம். எங்கு நோக்கினும் வறட்சி மட்டுமே காணப்படும். இந்த வனாந்தரத்திலிருந்து எப்படி வெளியே வரமுடியும்? வழி தெரியவில்லையே! என திகைக்கின்ற இடம் தான் வனாந்தரம். 

ஒருவேளை உங்கள் வாழ்க்கையிலே எப்பக்கம் திரும்பினாலும் நெருக்கம், பிரச்சினை, வியாதி, கடன்பாரம் போன்றவற்றில் சிக்கி, இதிலிருந்து வெளியே வர வழியே தெரியவில்லை என திகைத்துக் கொண்டிருக்கிறீர்களா? 

வேதத்திலே, ஆகார் தன் குடும்பத்தினரால் துரத்தப்பட்டு, கையில் குழந்தையோடு எங்கு போவது? எதிர்காலம் என்ன? என வழி தெரியாமல் திகைத்த போது, அந்த வனாந்தரத்தில் கர்த்தர் அவளைக் கண்டு அவளுக்கு வழிகாட்டி, அவளுக்கென்று ஒரு ஊற்றைத் திறந்து ஆசீர்வதித்தாரல்லவா? அதே தேவன் உங்களுக்கும் இரங்கி, உங்கள் எல்லா பிரச்சினைகளையும் மேற்கொள்ள ஒரு வழியையும் காட்டி உங்களை ஆசீர்வதிப்பார்.

அன்னாளின் வனாந்தரமான குடும்ப வாழ்வில் ஒரு சாமுவேலைக் கட்டளையிட்டவர் நம் தேவனல்லவா? அவர் நிச்சயம் உங்கள் வாழ்விலும் ஒரு வழியைத் திறப்பார். வனாந்தரமான உங்கள் வாழ்க்கை மாறும்.

வனாந்தரத்தில் செழிப்பு

‘‘அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’’. ஏசாயா 43:19

ஆறு ஒரு பகுதியிலே ஓடினால் ஒரு செழிப்பு உண்டாகுமல்லவா? அதைப் போலவே உங்கள் வாழ்விலும் ஒரு செழிப்பை உண்டாக்குவார்.

கடந்த வருடத்தில் நீங்கள் பலவித கடன் பாரங்கள், பொருளாதார நெருக்கடி, பஞ்சம், பட்டினி இப்படிப்பட்ட வனாந்தரம் வழியாக கடந்து வந்து, ‘என் தரித்திரம் எப்போது மாறும்?’ என வேதனையோடு காணப் படுகிறீர்களா? 

பிரியமானவர்களே, மாற்கு 6–ம் அதிகாரத்தில் ‘வனாந்தரத்திலே இயேசு ஜனங்களுக்கு போதித்த பின்பு வெகுநேரமான படியால் அவர்களுக்கு புசிக்கக் கொடுக்க வேண்டும்’ என்று சீடர்களிடத்தில் சொன்ன போது, ‘சீடர்கள் இது வனாந்தரமாயிற்றே, எப்படி ஜனங்களை போஷிப்பது’ என்றார்கள். ஆனால் இயேசுவோ அதே வனாந்தரத்தில் 5 அப்பம், 2 மீன்களைக் கொண்டு அநேக ஆயிரம் ஜனங்களை போஷித்து மீதியான துணிக்கை எடுக்கச் செய்தார் அல்லவா?

அதே இயேசு இன்று உங்கள் வாழ்வில் ஒரு அற்புதம் செய்து உங்களைப் போஷிக்க வல்லவராயிருக்கிறார். உங்கள் குறைவுகளை நிறைவாக்கி, உங்கள் தேவைகளை சந்தித்து நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்.

உங்கள் வனாந்தர வாழ்க்கை செழிக்கும்.

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54.

மேலும் செய்திகள்