துன்பங்களை அகற்றும் கரிவரதராஜ பெருமாள்

நம் நாட்டில் உள்ள பல ஆலயங்கள், வேதங்களோடும், புராணங்களோடும் தொடர்பு கொண்டு, புண்ணிய தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

Update: 2018-08-16 09:48 GMT
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளைக் கொண்டுள்ள தலமே ‘ஷேத்திரம்’ என அழைக்கப்படும். அந்த ஷேத்திரம், பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தரும் மகத்தான ஆற்றல் கொண்டவை. அவற்றுள் ஒன்று சென்னையில் உள்ள மாதவரம். இங்குள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்.

நாம் உணவு உண்ணும்போது ஜனார்த்தனன் என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது பத்மநாபன் என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்ல நேரிட்டால் நரசிம்மன் திருநாமத்தையும், மலையேறும்போது ரகுநந்தன் என்னும் திருநாமத்தையும் உச்சரித்துச் சொல்வது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது மாதவபுரம் என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம்செய்து வரம் பெற்ற தலம் என்பதால், ‘மகாதவபுரம்’ என்று பெயர் பெற்று, அதுவே நாளடைவில் மருவி ‘மாதவரம்’ என்றாயிற்று.

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ என வைணவ மரபில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு அவதரித்த வைணவ ஆச்சார்யர்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஷேத்திரங்கள், அபிமானத் தலங்களாக விளங்குகின்றன. அத்தகைய அபிமானத் தலங்களுள் ஒன்று தான் மாதவரம்.

இங்குள்ள உற்சவர்கள் கரிவரதராஜ பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்ற திருப்பெயருடனும் சேவை சாதிக்கின்றனர். உற்சவரின் பெயரிலேயே ஆலயம் அழைக்கப்படுகிறது. இத்தல உற்சவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, கிணறு தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டவர். புராணப் பெருமை வாய்ந்த இந்த ஷேத்திரம், கல் திருப்பணி ரீதியாக 1400 ஆண்டுகள் தொன்மையானது. காஞ்சீபுரம் சென்று வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியாதவர்களுக்காக, இரண்டாம் நந்திவர்மப் பல்லவ அரசனால், இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போருக்குச் சென்றபோது இத்தலத்தில் தங்கியிருந்து, பெருமாளை வழிபாடு செய்த இவ்வரசன், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த ஆலயம் எழுப்பியுள்ளான்.

மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். திருமலையில் எழுந்தருளி வரும் திருவேங்கடமுடையான் போல், இடக்கரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், ‘வேங்கடவரதன்’ எனவும் வழங்கப்படுகிறார்.

ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாயருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக்கொண்டாராம். இதனால் இவருக்கு தேன் உண்ட பெருமாள் என்ற பெயரும் உண்டு.

பெருமாளின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன் என பெரியோர் சொல்வர். ஆனால் கனகவல்லிக்கு இரண்டு திருக்கண்களுமே சந்திரன். கனகவல்லி தாயார், கருணையே பார்வையாகக் கொண்டவள். தன் பதியான கரிவரதராஜன் பக்தர்களிடம் காட்டும் கருணையை செயலாக்குபவள் இவள் தான். வரப்பிரசாதியான இந்தத் தாயாரை பத்து நிமிடம் தரிசித்தால், பெற்ற தாயிடம் பேசுவது போன்ற உணர்வு ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

துன்பத்தில் இருப்பவர்களை அரவணைத்து அருள்பாலிக்கும் இந்தப் பிராட்டி, திருமணத்தடையை நீக்குவதோடு, புத்திர பாக்கியமும் அருள்கிறாள். தொடர்ச்சியாக 12 வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நீராஞ்சன தீபமேற்றி, மஞ்சள் மாலை சாற்றி வேண்டுவோருக்குத் திருமணம், குழந்தைப்பேறு வாய்க்கிறது. பேச்சுத்திறன் இல்லாத குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் ஏற்படுத்தியும், காணாமல் போன குழந்தை திரும்ப கிடைக்கச்செய்தும் அதிசயம் நிகழ்த்தியுள்ளார். மனமுருகி வழிபடுவோருக்கு 21 நாளில் வேண்டுதல் நிறைவேறுகிறது.

இங்கு சுதர்சனாழ்வார், நரசிம்மர், தன்வந்திரி பகவான், லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி வராகர் சன்னிதிகளும் உள்ளன. ஆலயத்தின் முன்பு 21 அடி உயரத்தில் சுதைச் சிற்ப ரூபத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமை குங்குமார்ச்சனை, தை, ஆடி வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், ஊஞ்சல் உற்சவம், நவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம், தமிழ் வருடப் பிறப்பு, திருமலைபோல் ஒரு நாள் போன்றவை இவ்வாலய முக்கிய விழாக்கள் ஆகும்.

இங்கு பெருமாளை தரிசிப்பதற்கு முன்பு, சுதைச்சிற்ப ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களான சேனை முதலி, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரை வணங்கி, ஆண்டாள், கனகவல்லித் தாயாரை வழிபட்ட பின்பே கரிவரதராஜப் பெருமாளை வழிபடுவது முறையாகும்.

நம் வாழ்க்கையை சொர்க்கமாக அமைத்துக் கொள்ள கனகவல்லித் தாயார் சமேத கரிவரதராஜப் பெருமாள் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொள்வோம்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

சென்னை பாரிமுனையில் இருந்து 17 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 10 கி.மீ., பெரம்பூர் பஸ், ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் மாதவரம் உள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

 - கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்

மேலும் செய்திகள்