திருமணத் தடை நீக்கும் ஆரியங்காவு ஐயப்பன்

ஆரியங்காவில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார்.

Update: 2018-11-27 10:26 GMT
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி தருகிறார். திருமணத் தடை இருப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டுத் திருமணத் தடை நீங்கப் பெறலாம்.

தல வரலாறு

பரசுராமர் தான் தோற்றுவித்த கேரளாவின் பாதுகாப்புக்காகவும், செழிப்புக்காகவும் கடலோரங்களில் பத்ரகாளியம்மன் கோவில்களையும், மலைப்பகுதிகளில் சாஸ்தா கோவில்களையும் நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. பரசுராமர் மலைப்பகுதிகளில் குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன்கோவில், சபரிமலை, காந்தமலை (பொன்னம்பல மேடு) ஆகிய ஐந்து இடங்களில் சாஸ்தாவிற்கான கோவில்களை நிறுவியிருக்கிறார். அவற்றில் ஆரியங்காவு சாஸ்தா கோவிலும் ஒன்றாக இருக்கிறது என்று தல வரலாறு கூறுகிறது.

ஐயப்பன் திருமணம்

சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போன்று, இந்தக் கோவிலில் இருக்கும் ஐயப்பன் பிரம்மச்சாரியாக இல்லாமல், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தவராகக் காட்சி தருகிறார். இங்கிருக்கும் ஐயப்பனுக்குத் திருமணம் நடந்தது பற்றி சுவையான கதை ஒன்று இருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜாவின் அரண்மனைக்குத் தேவையான துணிகளை நெசவு செய்து கொண்டு போய் விற்பனை செய்து வந்தனர். அப்படிச் சென்ற வணிகர்களில் ஒருவர், ஒரு முறை தனது மகள் புஷ்கலையையும் உடன் அழைத்துக் கொண்டு திருவிதாங்கூர் சென்றார். அவருக்கு மகள் புஷ்கலையைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்வது மிகவும் கடினாமக இருந்தது.

அவர்கள் இருவரும் ஆரியங்காவு கணவாய்ப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். புஷ்கலை அதற்குள்ளாகவே மிகவும் களைத்துப் போயிருந்தார். இனி அவளை திருவிதாங்கூருக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று நினைத்த அந்த வணிகர், அங்கிருந்த சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரைச் சந்தித்து, தான் திருவிதாங்கூர் சென்று திரும்பி வரும் வரை, தனது மகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி ஒப்படைத்துச் சென்றார்.

சாஸ்தா கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டில் தங்கிய புஷ்கலை, சாஸ்தா கோவிலுக்குத் தேவையான சில பணிகளைச் செய்து வந்தார். நாளடைவில், அவளது மனத்தில் அந்தக் கோவிலில் இருக்கும் சாஸ்தாவையேத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது.

இந்நிலையில், புஷ்கலையின் தந்தை திருவிதாங்கூர் சென்று துணிகளை விற்பனை செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் அவரை, மதம் பிடித்த யானை ஒன்று விரட்டத் தொடங்கியது. அதனைக் கண்டு பயந்த அவர் வேகமாக ஓடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞன், அந்த மத யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான்.

தன்னைக் காப்பாற்றிய இளைஞனுக்கு நன்றி தெரிவித்த அவர், அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். அந்த இளைஞன், ‘உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, வணிகர் ஆரியங்காவு வந்து சேர்ந்தார்.

ஆரியங்காவிலுள்ள சாஸ்தா கோவிலுக்குச் சென்ற வணிகருக்கு, கோவில் கருவறையிலிருந்த சாஸ்தாவின் உருவம், காட்டில் மதயானையிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய இளைஞரின் உருவமாகத் தெரிந்தது. தனது மகளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியே சாஸ்தா, காட்டிற்குள் மதம் பிடித்த யானையைக் கொண்டு, நம்மை ஓடச் செய்து, காப்பாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

அதன் பிறகு வணிகர், அந்தக் கோவில் அர்ச்சகரிடம் காட்டில் நடந்த கதையைச் சொல்லித் தன் மகள் புஷ்கலையை சாஸ்தாவிற்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாகச் சொன்னார். அர்ச்சகரும், கோவில் உயர் அதிகாரிகளுக்கு அந்தத் தகவலைத் தெரிவித்து வரச் செய்தார். வணிகரும், தனது ஊரான மதுரையிலிருந்து தனது உறவினர்களை வரச் செய்தார்.

அதன் பிறகு, சாஸ்தாவிற்கும் புஷ்கலைக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையை மனைவியாக ஏற்றுத் தன்னுடன் ஆட்கொண்டார் என்று இக்கோவிலில் ஐயப்பன், புஷ்கலை திருமணம் நடந்த கதை மரபு வழியாகச் சொல்லப்பட்டு வருகிறது.

கோவில் அமைப்பு

கேரளக் கட்டுமான அமைப்புடன் அமைந்த இக்கோவில் கருவறையில், ஐயப்பன் வலது காலைக் கீழே ஊன்றியும், இடது காலைச் சிறிது உயர்த்தியும் வைத்து அமர்ந்த நிலையில் அரசர் தோற்றத்தில் இருக்கிறார். இவருக்கு வலது புறம் சிவபெருமான் லிங்க வடிவிலும், இடதுபுறம் புஷ்கலை நின்ற நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில், நாகராஜர், கணபதி, வலியக்கடுத்தா கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோரும் துணைக் கடவுள்களாக இருக்கின்றனர்.

வழிபாடுகள்

இங்கு ஐயப்பனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் மண்டல வழிபாட்டு நாட்களில், சபரிமலையில் நடக்கும் நிகழ்ச்சி நிரலை அடிப்படையாகக் கொண்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இங்கு ஆண்டுதோறும், மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதத்தில் ஐயப்பன் - புஷ்கலை திருமண விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாளில் பாண்டியன் முடிப்பு எனப்படும் நிச்சயதார்த்த நிகழ்வும், தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்வும், சமபந்தி விருந்தும் மிகச் சிறப்பாக நடத்தப் பெறுகின்றன.

திருமணத்தடை இருப்பவர்கள், இங்கிருக்கும் சாஸ்தாவை வழிபட்டு வேண்டினால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், கொல்லம் நகரில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும், புனலூர் நகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் ஆரியங்காவு உள்ளது. இங்கு செல்ல மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதி இருக்கிறது.

தேனி மு.சுப்பிரமணி

மேலும் செய்திகள்