துன்பம் அகற்றும் கால பைரவர்

சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று ‘பைரவர்’ வடிவம். ‘பீரு’ என்ற சொல்லில் இருந்து இருந்து வந்தது ‘பைரவர்’ என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் ‘பயம் தரக்கூடியவர், எதிரிகளை அஞ்ச வைப்பவர்’ என்று பொருள்படும். பைரவர் நாய் வாகனத்தைக் கொண்டவர்.

Update: 2018-11-27 12:14 GMT
30-11-2018 கால பைரவாஷ்டமி

காசியில் கால பைரவர் என்ற பெயரிலும், தமிழ்நாடு காரைக்குடி அருகில் உள்ள இலுப்பக்குடி என்ற இடத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் என்ற பெயரிலும், சீர்காழி சட்டைநாதர் கோவிலில் அஷ்ட பைரவராகவும், ஸ்ரீவாஞ்சியத்தில் யோக பைரவராகவும், பல வித தோற்றங்களில் பைரவர் வணங்கப்படுகிறார். இந்த ஆலயங்கள் அனைத்தும் சிறப்பு பெற்றவையாக உள்ளன.

அந்த வகையில் பைரவரின் எட்டு விதமான தோற்றங்களை, ஒரே ஆலயத்தில் வழிபடும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது, பைரவபுரம் திருத்தலம். இதனை ‘அழிவிடை தாங்கி பைரவபுரம்’ என்றும் அழைக்கிறார்கள். இங்கு தான் பைரவரின் எட்டு வித தோற்றங்கள் சுதை வடிவில் காணப்படுகிறது. அன்ன வாகனத்துடன் கூடிய பிராம்மி சக்தியுடன் அசிதாங்க பைரவர், ரிஷப வாகன மகேஷ்வரியுடன் ருரு பைரவர், மயில் வாகன கவுமாரியுடன் சண்ட பைரவர், கருட வாகன வைஷ்ணவியுடன் குரோதண பைரவர், குதிரை வாகன வராகியுடன் உன்மத்த பைரவர், யானை வாகன இந்திராணியுடன் கபால பைரவர், சிம்ம வாகன சாமுண்டியுடன் பீஷண பைரவர், நாய் வாகன சண்டிகையுடன் சம்ஹார பைரவர் உள்ளனர்.

சொர்ண கால பைரவர் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்தக் கோவில், கொடிமரம், பலிபீடம், நந்தி என்று ஆலயத்துக்குரிய முழு அமைப்புடன் அமைந்திருக்கிறது. ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்தார் பைரவர். ஆணவம் அழிவதற்காக பிரம்மன் வழிபட்ட தலமே இந்த பைரவபுரம் என்று சொல்லப்படுகிறது. இங்கு மூன்று கண் கொண்டவராக, நான்கு திருக்கரங்களுடன் சூலம், உடுக்கை, கத்தி, கபாலம் ஏந்தி காட்சி தருகிறார் சொர்ண கால பைரவர்.

பழங்காலத்தில் தொண்ட மண்டலம், தொண்ட காருண்யம் என்ற காடுகளை திருத்தி, நாடாக்கி அதனை பவுத்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது இந்த ஊர் ‘அறவழித்தாங்கி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் இந்த பகுதியை பல்லவர்களும், சோழர்களும் ஆட்சி செய்த போது சிவனை போற்றும் சைவ நெறி வளர்ந்தது. கி.பி. 14-ம் நூற்றாண்டில் வீர சம்புவராயன் என்ற மன்னர் இங்கு கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தான். வடக்கே இருந்து படையெடுத்து வந்த யாதவராயன் என்ற மன்னனுடன் வீர சம்புவராயன் தன் படை கொண்டு மோதினான்.

முதல் நாள் போரில் வீர சம்புவராயனின் படைகள் வெகுவாக அழிந்தன. இதனால் மன்னன் வருத்தம் கொண்டான். அன்று இரவு கால பைரவர் மன்னனின் கனவில் தோன்றி, ‘நீ வருந்த வேண்டாம். நாளைய போரில் நீ வெற்றி பெற நான் துணையிருப்பேன்’ என்றார். அடுத்த நாள் போரில் சம்புவராயன், வெற்றிபெற்றான். அழிந்து போன படைகளையும், நகரத்தையும் பைரவர் காப்பாற்றிக் கொடுத்ததால், இந்த ஊர் ‘அழிபடைதாங்கி’ என்றானது.

வெற்றியைத் தொடர்ந்து சொர்ண கால பைரவருக்கு மன்னன் பெரிய கோவிலை எழுப்பினான். இந்த ஆலயத்தின் மகிமையானது திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் ஆலய தல புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீபைரவப்பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். வந்து வணங்கும் பக்தர்களுக்கு சகல விதமான வெற்றிக்கும் வழியமைத்து தருகிறார்.

சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்த ஆலயம். கோவிலில் அருள்பாலிக்கும் பைரவர் தெற்கு நோக்கி காட்சி தந்து, அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவரின் வாகனம் மேற்கு நோக்கி இருக்கும். ஆனால் இங்குள்ள நாய் வாகனம் கிழக்கு நோக்கி இருப்பது வித்தியாசமாக உள்ளது. காசியிலிருக்கும் கால பைரவருக்கு நிகரான ஆலயம் இது என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பைரவர் கோவில்கள் இருந்தாலும், சொர்ணகால பைரவருக்கான தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலய இறைவன் விக்கிரகம், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

வாஸ்து பகவானுக்கு குரு, கால பைரவர் என்பதால், இவரை வணங்கினால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். பைரவர் சனி பகவானுக்கு குருவாக இருக்கிறார். எனவே சனியில் துன்பங்களில் இருந்து விடுபடலாம். மேலும் திருமணத்தடை நீங்கும். பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி பெரும். வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகளும் அகலும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

தேய்பிறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருவண்ணமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் உள்ளது அழிவிடைதாங்கி கிராமம் என்னும் மதுரா பைரவபுரம். காஞ்சீபுரத்தில் இருந்து வெம்பாக்கம் வழியாக அழிவிடைதாங்கி வந்தடையலாம், வெம்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாகவும் வரலாம்.

ராஜசேகர், செய்யாறு.

மேலும் செய்திகள்