ஆதிமனிதன்

எல்லாம் வல்ல அல்லாஹ் வானுலகில் சொர்க்கத்தையும், மலக்குகளையும், ஜின் இனத்தாரையும் படைத்தான். அதன்பிறகு இந்த உலகத்தையும், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்க நாடினான்.

Update: 2019-01-01 10:56 GMT
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை களிமண்ணால் இறைவன் படைத்தான். அடுத்து, அல்லாஹ் தன் ‘ரூஹானியத்தை’ (உயிர் மூச்சை) ஊதினான். தலையில் ஊதப்பட்ட உயிர் மூச்சுக்காற்று உடல் முழுதும் பரவி நாசித்துவாரத்தின் வழியாக வெளியானது. உயிர் பெறும் அந்த தருணத்தில், மூக்கின் வழியாக மூச்சு வெளியான போது ஆதம் (அலை) அவர்கள் தும்மினார்கள்.

தும்மிய மறுகணமே ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்று அவர்கள் சொன்னார்கள். முதல் மனிதனின் முதல் வார்த்தை ‘எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே’ என்பதாகவே ஆரம்பம் ஆனது.

அதனைச்செவியுற்ற அல்லாஹ் மனம் மகிழ்ந்தவனாக, “இர்ஹ்முக்க வ ரப்புக்க”, உங்கள் இறைவனின் அருட்கொடை உங்களுக்கு கிடைக்கட்டுமாக” என்று வாழ்த்துச் சொன்னான்.

ஆதம் (அலை) அவர்களைப் படைப்பதற்கு முன்பாகவே, தன்னுடைய மலக்கு(வானவர்)களை ஒன்று திரட்டி, ‘மலக்கு, ஜின் என்ற இரண்டு படைப்புகளோடு மனிதன் என்ற இன்னுமொரு படைப்பையும் படைக்கப் போகிறேன்’ என்று அல்லாஹ் சொன்னான்.

அப்போது மலக்குகள் எல்லாம், “எங்கள் இறைவனே! நாங்களோ பரிசுத்தமானவர்களாக இருக்கின்றோம். எந்நேரமும் உன் புகழைப் போற்றியவர்களாக உள்ளோம். எங்களைத் தவிர்த்து உலகில் சண்டை செய்து ரத்தம் சிந்தக்கூடியவர் களையா நீ படைக்க நாடுகிறாய்?” என்று கேட்டனர்.

“மலக்குகளே! நான் அறிந்தவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லி அவர்களுக்கு இறைவன் பதில் கூறினான்.

அதன்பின், ஆதம் (அலை) அவர்களுக்கு உலகின் படைப்புகள் அத்தனையையும் சொல்லித்தந்தான். தொடர்ந்து, உலகப் பொருட்களை மலக்குகளிடம் காட்டி, ‘இதன் பெயர்களைக் கூறுங்கள்’ என்று சொன்ன போது “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு அறிவித்து தந்ததைத் தவிர்த்து நாங்கள் வேறு எதையும் அறிய மாட்டோம்” என்றார்கள்.

ஆனால் ஆதம் (அலை) அவர்களோ எல்லாவற்றின் பெயரையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சொன்னார்கள். இதனால் அல்லாஹ் மலக்குகளை விட மனிதர்களை அந்தஸ்த்தில் உயர்த்தி வைத்தான். இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதாது:-

“நிச்சயமாக நான் உங்களைப் படைக்க கருதி, உங்களை அதாவது உங்கள் முதல் தந்தையாகிய ஆதமை உருவமைத்தோம். பின்னர் நாம் வானவர்களை நோக்கி ‘ஆதமிற்கு சிரம் பணியுங்கள்’ என்று கட்டளையிட்டோம். இப்லீஸைத் தவிர மற்ற வானவர்கள் அனைவரும் அவருக்கு பணிந்தார்கள், அவன் பணியவில்லை” (திருக்குர்ஆன் 7:11).

மனிதன் மீது கொண்ட அபரிமிதமான அன்பின் காரணத்தால் மற்றைய படைப் பினங்களை மனிதனுக்கு சிரம் பணிந்து வணங்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். ஆனால் இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தான். அதனால் அவன் சபிக்கப்பட்ட சைத்தானாக சொர்க்கத்திலிருந்து வெளியில் வீசி எறியப்பட்டான்.

இதுபற்றி திருக்குர்ஆன் கூறுவ தாவது:-

“ஆகவே இறைவன் இப்லீஸை நோக்கி, ‘நான் உனக்கு கட்டளையிட்ட சமயத்தில் நீ சிரம் பணியாதிருக்கும் படி உன்னைத் தடைசெய்தது எது?’ என்று கேட்க, அதற்கு இப்லீஸ், ‘நான் அவரை விட மேலானவன், ஏனென்றால் நீ என்னை நெருப்பால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்திருக்கிறாய். களிமண்ணை விட நெருப்பு உயர்ந்தது’ என்று இறுமாப்புடன் கூறினான்.” (திருக்குர்ஆன் 7:12)

சொர்க்கத்தில் எத்தனை இன்பங்கள் இருந்தாலும் அவைகள் எல்லாம் ஒரு எல்லையை எட்டிவிட்ட பிறகு தனிமை என்ற கொடுமை வாட்டுவதை ஆதம் (அலை) அவர்கள் உணர்ந்தார். இதை அறிந்த அல்லாஹ், அவருக்கு தக்க துணை ஒன்றைப் படைக்க நாடினான்.

ஒரு நாள் ஆதம் (அலை) அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அவரது விலா எலும்பை முறித்து “ஹவ்வா” என்ற பெண்ணைப் படைத்தான்.

ஆதம் நபி கண்விழித்து பார்த்த போது, அவர் முன்பு அழகிய வடிவில் ஒரு உருவம் நிற்பதை கண்டார்கள். அந்த உருவத்தின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

பின்னர் அந்த உருவத்திடம், ‘நீங்கள் யார்?’ என்று ஆதம் (அலை) வினவிய போது, ‘நான் தான் ஹவ்வா, உங்களுக்கு துணையாக நான் படைக்கப்பட்டுள்ளேன்’ என்றார்.

எத்தனை இன்பங்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும், ஒரு மனிதனின் தனிமையைப் போக்கவும், அவன் மனதிற்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும், இன்பத்தையும் தரக்கூடியவர் மனைவி என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

இதுபற்றி இறைவன் இவ்வாறு குறிப்பிடுகிறான்: “நாம் ஆதமிற்கு துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி, ‘ஆதமே, நீர் உமது மனைவியுடன் சொர்க்கத்தில் வசித்திருப்பீராக. நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் விரும்பியவற்றை தாராளமாக புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை நெருங்காதீர்கள். நெருங்கினால் நீங்கள் இருவரும் உங்களுக்கு தீங்கிழைத்து கொண்டவர்களாவீர்கள்” என்று கூறினோம்.

இறைவனின் கட்டளைப்படி ஆதம் (அலை) அவர்களும் அந்த மரத்தின் அருகில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்து கொண்டார்கள். ஆனால் இப்லீஸ் என்ற சைத்தான் இதைக்கெடுக்க முடிவுசெய்தான்.

தான் பெற்றிருந்த உயர்ந்த பதவியில் இருந்து கீழிறக்கப்பட்டு இழி நிலைக்கு ஆளாக்கிய ஆதம் மீது சினம் கொண்டான். அவரையும், அவரது புனித தன்மையையும், எப்படியாவது கெடுத்து அவரை சிறுமைப்படுத்த வேண்டும் என்று காத்திருந்தான். அவன் ஏற்கனவே இறைவனிடம் இதுகுறித்து அனுமதியைப் பெற்றிருந்தான். திருக்குர்ஆன் அதை இவ்வாறு விவரிக்கின்றது.

“இப்லீஸாகிய அவன் இறந்தவர்களை எழுப்பும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடு”என்று கேட்டான். அதற்கு இறைவன், நிச்சயமாகவே நீ அவ்வாறே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறாய்” என்று கூறினான்.

“அதற்கு இப்லீஸ் இறைவனை நோக்கி, நீ என்னைப் பங்கப்படுத்தியதால் ஆதமுடைய சந்ததிகளாகிய அவர்கள் உன் நேரான வழியில் செல்லாது தடை செய்ய வழிமறித்து அதில் உட்கார்ந்து கொள்வேன்” என்றான். (திருக்குர்ஆன் 7:14-16).

இப்படி கூறிய இப்லீஸ், ஆதமை வழிகெடுக்க திட்டமிட்டான். எந்த மரத்தின் அருகே செல்லக்கூடாது என்று இறைவன் கட்டளையிட்டு இருந்தானோ, அதை பயன்படுத்தி, அவர்களை கெடுக்க முடிவு செய்தான். இதுதொடர்பாக, அவர்கள் மனதில் ஆசையை விதைக்க எண்ணி, அதில் வெற்றியும் பெற்றான்.

மேலும் செய்திகள்